பரத்தையர் வீதி
கண் தெரியாதவள் எனினும்
ஒளிபொருந்தியவை அவளுடைய சொற்கள்
”பூட்டிய கதவையே பார்த்துக்கொண்டு
திறந்திருக்கும் கதவைத் தவறவிடாதே”
என்றாள் ஹெலன் கெல்லர்
பதிவிரதையர் தெருக்கள் நீங்கி
பரத்தையர் வீதிக்கு வந்தேன்
எனக்கு வயது இருபத்தைந்து
இன்னும் பெறவில்லை ஐயா அந்த அனுபவம்
ஒரு நூறு மங்கையர் ’விரகதாபத்துடன்’
என்னை அழைக்க, ஒருவரையும் தொடாது
என் இல் வந்து அழுதேன், அவர்கள் அத்தனை பேரும்
என்னால் கைவிடப்பட்டு வாடும்
என் மனைவியர்தாம் என்பதுபோல்
மறுநாள் துக்கச் சிலுவையுடன்
அவர்கள் மத்தியிலே நான் நடந்துசெல்ல
அவர்களில் ஒருத்தி என்னை அறிந்தவளாய்
கோபத்துடன் என்னைப் பிடித்துத்
தன் வீட்டுக்குள் இழுத்துச்சென்றான்:
என் பாக்கெட்டைத் துழாவி
இருந்த காசுகளைக் கைப்பற்றினாள்
அன்று நான் பெற்றுக்கொண்டேன் ஐயா,
அவளிடமிருந்து அந்த அனுபவத்தை
இன்று என் மனைவியின் பெயரைப் போலவே
அவள் பெயரையும் நன்கு அறிவேன்
ஒரு சாதாரண வாழ்வின்
சாதாரண மனிதனய்யா நான்