குல்லாய் வியாபாரி
உதறவே உதற முடியாத சுமை மூட்டை அவன் தலையில்
குல்லாய் வேணுமா குல்லாய் என்று கூவித்திரிகிறான்
’இந்தக் குல்லாயை எல்லார் தலையிலும்
சூட்டிவிட்டால் போதும்’ என நினைக்க நினைக்க
உதறவே உதறமுடியாத நித்யபெருஞ்சுமையாகிவிட்டது
அவன் தலை மூட்டை
ஓர் ஊருக்கும் இன்னொரு ஊருக்குமிடையே
ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமிடையே
அவன் கடக்கவேண்டிய பாலைவனத்திலும் கானகத்திலும்
கூவலின்றி சுமை மட்டுமே அழுத்தும் பாதயாத்திரை
ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாற எண்ணயவன்
அயர்ந்து தூங்கிவிட்டான மூட்டையை மறந்து.
குரங்குகள் குதித்தன அவன் தூக்கத்தின் மரத்திலிருந்து.
அவை பிரித்த மூட்டையிலிருந்து வெளிப்பட்டன
வெறுமையின் கனிவு; கனிவின் வெறுமை,
இன்மையின் பெருஞ்சுமை; பெருஞ்சுமையின் இன்மை,
கண்ணீரின் ஆனந்தம்; ஆனந்தத்தின் கண்ணீர்,
அர்த்தமின்மையின் அர்த்தம்; அர்த்தங்களின் அர்த்தமின்மை
என்று ஒவ்வொரு தொடுதலுக்கும் தலைகீழாய்
மாறிக்கொள்ளும் வண்ணக் குல்லாய்கள்
தலைக்கொன்றாய்ச் சூடிக்கொண்டிருந்த குரங்க்கள்
விழித்த அவனைக் கண்டதும் விருட்டென்று மரத்தின் மேல்,
அவன் விரும்பிய காட்சியை அவனுக்களிக்கவே விரும்பியது போல்,
என்ன அற்புதமான காட்சி அது!
அழகியதோர் தந்திரத்தால்
(’தனது’ என்று ஒன்றை அணிந்துகொண்டு
அப்புறம் அதைத் தூர எறிந்தான்)
அக் குல்லாய்களைச் சேகரித்துக்கொண்டு நடந்தான் அவன்
மனிதர்கள் தென்படும்போதெல்லாம் கூவினான்