விழிகள் கனலும் விரல்நுனிகள்
கண்கள் போய்விட்டதன் காரணமோ – அன்றி
இருள்தான் சூழ்ந்துவிட்டதோ புறமெங்கும்?
எவ்வாறாயினும்
துழாவ முன்நீளும் என் விரல்களில்
எரிகிறது என் ஜீவன்
தம் விழிகளை இல்லாமல்
என் விரல்நுனிகள் தேடுவது எதை?
தம் பாதங்களுக்கான பாதை தேடும் முயற்சியில்தான்
எத்தனை தடங்கல்கள்!
எத்தனை தடுமாறல்கள்!
எத்தனை அலைச்சல்கள்!
இடறி விழல்கள் எத்தனை!
இடித்துக்கொள்ளல்கள் எத்தனை!
என் கால்பட்டு உருண்டு ஓடுகிறது ஏதோ ஒன்று
கொட்டிக் கவிழ்கிறது ஏதோ ஒன்று
உடைந்து சிதறுகிறது ஒன்று
வீறிட்டலறுகிறது ஒன்று
வருந்துகிறேன், வருந்துகிறேன்
மன்னியுங்கள், மன்னியுங்கள் என்னை
இன்று, தம் விழிகளைத் தேடித்தேடித் தவித்த
என் விரல் நுனிகளிலேயே விழிகள்