மரம்
என் மூச்சுக் காற்றால் ஊதிய
பலூனுக்குள்ளிருக்கும் காற்றைப்போல்
அசைவற்றுக் குந்தியிலிருந்தது காலம்.
ஒரு வெடிகுண்டை
அது வெடித்து விடாமலிருக்க வேண்டுமே
எனக் கவலையோடு பற்றியிருக்கும்
அனைத்து விரல்களையும்போல்
அவன் தன் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்
பெருத்த வேதனைக்குப் பிறகு
பூமியில் ஊன்ற ஒப்புக்கொள்ளும் கால்கள்
இன்று யதேஷ்டம்.
உள்ளங் கால்களில் வேர் அரும்ப
என் மண்டையில் ஏற்படும் இளக்கம்
இன்று யதேஷ்டம்.
இன்று இந்த விருட்சம்
என் தலைவிரிகோலம்.
கற்றோர் கூடிய அவையில்
’நீட்டோலை வாசியா நின்ற’ நெடுமரமாய்
என்னைப் புரட்டியிருந்தது மரணம்.
அன்றைய விடியலில்
மரம் அறிந்தவை கவிஞன் அறிந்தவை:
பிரபஞ்ச கானம், பிரபஞ்ச பாஷை, பிரபஞ்ச ஒழுக்கம்.
கற்றோனுக்குத் தெரிந்ததெல்லாம்: ’மக்கள் அவை
முந்தி இருப்பச் செயல், கற்பு, கைதட்டல் பெறல்.’
காலம் வெடித்த வெடிச்சப்தத்தில்
கலவரமுற்ற பறவைகளைப்போல்
கனத்த, உபயோகமற்ற
என் சிந்தனைகளைக் கிழித்துக்கொண்டு
வேகு வேகு என்று மரத்தை நோக்கிச்
சிறகடித்துக்கொண்டு வந்தது ஒரு கரிய காற்று.
சிறு ஆசுவாசத்தை விட்டு விட்டு அது மீண்டும்
ஆழம் காணமுடியாத ஆகாசத்தை நோக்கி
வேகுவேகெனச் சிறகடிக்கிறது.
கீழே, தன் ஒவ்வொரு இலையிலும்
ஒளியை ஏந்திக்கொண்டு நிற்கும் மரம்