Thursday, March 14, 2013

பாம்பு பாம்பு

அஞ்சிச் சிதறி ஓடும் மனிதர்களை
மோதிக்கொள்ளாமல் விலக்கியபடி
அவர்களை விரட்டிய மையம் நோக்கி
என் பயணம் எதிர்நீச்சலாகியும் கூட
எவ்வளவு ஆர்வமாய்
நான் உன்னருகே வந்தேன்!

தன் உடம்பையே சிம்மாசனமாக்கித்
தலைநிமிர்ந்து நின்றிருந்தாய் நீ
அந்தக் கம்பீர அழகில்
காதலாகி வீழ்ந்தேன்
உன்னை நேர்கொண்டு நோக்குதற்காய்
மண்டியிட்டு அமர்ந்தேன்

ஒருவரையொருவர்
இமை கொட்டாது பார்த்துக்கொண்டு நிற்கிறோம்
நம்மிடையே போதிய இடைவெளி –
காலத்தின் சந்நிதியாய் அது விரிந்து கிடக்கிறது

இதற்கு முன்னும் நாம் சந்தித்திருக்கிறோம்
விறைப்பான வாள் ஒன்று
தன் குழந்தைகளிடம் விளையாட்டாய் வளைந்து
வேடிக்கை காட்டுவதுபோல்
எங்கள் நிர்வாணப் படுக்கையின்
ஜன்னல் கம்பியில் வந்து நின்றிருந்தாய்
அப்புறம் ஒரு நாள்
நண்பர் ஒருவரோடு தண்டவாளத்தைத் தாண்டும்போது
ஒரு வினாடி – என் பாதத்தின் கீழ் –
மிதிபடாமல் தப்பித்து என் முன்னே விரைந்தாய்,
உன் முதுகின்மேல் நிலாவொளிவாள்.

சரி, இப்போது?
இனி என்ன?
அஞ்சுவோர்க்காக வேண்டி
தன்னை ரகஸ்யத்துள் வைத்துக்கொள்வதற்காக
இப்போது பிரியவேண்டி
விடைபெறுவோமா?

நல்லது.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP