உப்பு ஒளி
தொழுநோய் அரித்த விரல்கள்போல் நிற்கும்
இந்த மொட்டைச் சவர்களைச்
சீர்திருத்தவா? இடத்துக் கட்டவா?
கவலை படிந்த என் அந்தரங்கங்கள்
கரித்த அலுமினியப் பானைகளும்
அடுப்புப் புகையேறிய தட்டுமுட்டுச் சாமான்களும்
கலைந்த கொடித்துணிகளும்
நடுச்சாலையில் நசுங்கிய சாதுப்பிராணியின்
உள்ளுறுப்புகள் போல் பகிரங்கமாகிவிட்டன
இந்தப் புயலில்
உறைந்த என் இரத்தத்தின் நிச்சலனத்தை
ஓங்கிக் கரைத்துக்கொண்டிருக்கின்றன
மழையின் எண்ணிலா வெள்ளிகரங்கள்
ஒரு மரணத்துக்குப்பின்
உலகின் எல்லா ஓடைகளிலும்
என் உதிரம் கலந்து கலகலக்கிறது
மழைத்துளிகள் கிச்சுக்கிச்சு மூட்ட
நுரை சுழித்துக் கொண்டோடும் நதி
அதன் ஆனந்தத்திலும்கூட என் குருதியின் மரணமணம்
நெடுஞ்சாலையில் பதற்றமாய் விரையும் லாரிகள்,
உப்பின் குதலைவெண்சிரிப்பு
மீண்டும் கடலோடு கரைந்துவிடாமல்
தார்ப்பாயால் பாதுகாத்துக்கொண்டு பறக்கின்றன
ஒவ்வொருவர் உணவிலும் ஸ்பூன் ஸ்பூனாய்ப்போய்ச் சேர.
இருந்தும், எனது கூரை போய்விட்டது
எனது பாத்திகள் அழிந்துவிட்டன
வேகமான மழையின் கூர் நகப் பிறாண்டல்களால்
அதீதக் கறுப்பெய்தி
அச்சுறுத்தி நின்ற பனைகளின்
உச்சி ஓலைகளெங்கும்
காயத்துடன் திரியும் சிறுத்தையொன்றின் அலமறும் ஒலி
மழைக்குப்பின்
எதைப்பற்றியும் கவலைப்படாத ஓர் உப்பு ஒளி;
கறுகறுத்த பனைகளின் ஈர மினுமினுப்பில்
ஒரு வைரத்தின் தீவிரமாய்ச் சுடர்கிறது
முகம் காட்டும் சூரியன் முன்னெங்கும்
இன்னும் கரையாத கருமேகங்கள் மற்றும்
சொல்லொணாப் பாரமான என் விரக்தி வானம்