(எனது) இருப்பு
நான் மரித்தவுடன் துவங்குகிறது
எனது இருப்பை மதிக்கும் உங்கள் சடங்காச்சாரங்கள்.
எனது இருப்பு –
உங்கள் ஆக்கினைக்கு எட்டாத புயல்.
இமாலயச் சிகரங்களையும்
குனித்த புருவத்துடன் நோக்கும் வெளி.
உனது அப்பனும் உனது கிரகத்தின் புருஷனுமான
சூர்யனுக்கே ஒளிகொடுக்கும் திமிர்.
மழையென்றும் வெள்ளமென்றும்
பூமியையே ஆட்கொண்டுவிடும் கடல்.
உனது சுகதுக்கங்களைக் கண்டுகொள்ளாத
ஆனந்தத் திருநடனம்.
உனது பாவபுண்ணியங்களைச் சட்டை செய்யாத
கொடூரம். உனது எல்லா அக்கிரமங்களையும்
மன்னித்துவிடும் காருண்யம்.
வித்துக்குள் விருட்சமாய் அடங்கியிருக்கும் ஆவேசம்.
உனது வெடிகுண்டுக்குள் நீ திணித்திருக்கும் மருந்து.
உனது இரும்பின் கூர்விளிம்பில் வழியும் குருதி.
நீ உன் பூமியெங்கும் தூவிவிட்ட முட்செடி.
(காற்றின் சதைகீறி குருதியை உறிஞ்சி கொண்டிருக்கிறது அது)
உனது அலட்சியத்தின் எரிதிரவத்தில் நின்றாடும் நெருப்பு.
(உனது அலட்சியம் தீரும்வரை தீராது அது)
உங்கள் சடங்காச்சாரங்களையும் கலாச்சாரங்களையும்
ஏளனம் செய்தபடி கிடக்கும் என் பிணம்.
உங்கள் போர்க்கருவிகள் எதுகொண்டும்
தீண்டக்கூட முடியாத மௌனம்.
உங்கள் எதிர்கொள்ளலை – உங்களிடமிருந்து எதையுமே –
இறைஞ்சி நிற்காத காம்பீர்யம்.
உன் பாடலுக்கு மட்டுமே புன்னகை அரும்பும் முகம்.