நீலகிரி
மலைமீது ஒரு புல்வெளியாய் விடிந்திருக்கிறது
மஞ்சுவைத் தன் மடியில் வந்து அமரச் செய்யும் அன்பு.
மலைமடிப்புகளெங்கும் ஏறி இறங்கி விளையாடும்
உன் உயிர்மூச்சின் தாளலயம்.
பள்ளத்தாக்குகளெங்கும் வற்றாத ஊற்றுக்களாய்க்
கோர்த்துக் கிடக்கிறது
உன் அன்பின் உள்ளீரம்
வங்கொலையாய்ப் பிடுங்கப்படும்
புல்லின் வேர்களில்
அலறுகிறது
லட்சோப லட்ச வயதான தொந்தம்.
இயற்கையின் மவுனமொழி கேட்டறியாச்
செவிடனின் விழிகளைக் குத்துகின்றன
நசிவுக் காட்சிகளின் தீப்பந்தங்கள்
அருகிவரும் சோலைவனக் காடுகளின் அருகே
விழிகளில் நீரும் வெற்றுக் குடமுமாய் ஒரு வன தேவதை.
கலைந்த கூந்தலும் கிழிந்த ஆடையும்
கதிகலங்கித் தப்பித்தோடும் கால்களுமாய்
யூகலிப்டஸ் வனத்தினூடே ஒரு தேவதை.
நட்சத்ர விடுதி ஒன்றில்
தன் மலர்ப்புன்னகைக்கும் சேர்த்துச்
சம்பளம் பெறும் பணிப்பெண்ணாய் ஒருத்தி.
மோகித்து காதலித்து ஓடிப்போய்
தன்னைவிட்டும் ஓடிப்போனவனால்
ஏமாந்து தனித்து
தாய்வீடு திரும்ப இயலாக் கவுரவம் கொண்டு
தேயிலைத் தோட்டங்களிலும் கட்டிடக் காடுகளிலும்
வாடும் வனதேவதைகள்
மேயும் கால்நடைகளாய்
அமர்ந்திருக்கும் ஆதிவாசிகளின் குடியிருப்புகள்;
இரவின் அந்தகாரத்திலிருந்தும்
இயற்கையின் மவுனவெளியிலிருந்தும்
எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓர் அழுகைக்குரல்
மலைச்சரிவின் சரிவில்
தேய்ந்துகொண்டிருக்கும் ஆதிமொழி,
எழுத்தில்லாது அலையும் வனதேவதைகள்
ஆளரவமற்ற பள்ளத்தாக்கு ஒன்றில்
தான் விளிக்கப்படாத தனிமையினால்
தன் பெயரைத் தானே மறந்து
பிரக்ஞையற்றுக் கொண்டிருந்தவனின் சீரழிந்த உடல்.
அங்கிருந்தும் அவனைத் தோள் கொடுத்துத்
தூக்கிக்கொண்டு வந்தேன் நான்;
வரும் வழியிலேயே அவன் காணாமல் போகவே
அன்பின் கடவுள் அவன் என அறிந்தேன்