சிதை
அவிந்த நெருப்பும் உறைந்த புகை மேகங்களுமாய்
மரணத்தின் மடியி்ல்
சற்றே தலை சாய்ந்திருந்தது மத்யான வீதி
மரணமண்டபத் தூண்களாய்க்
கறுகறுத்து நிமிர்ந்த பனைகளூடே...
வெறுமையே
அளந்து அளந்து கொட்டும் முயற்சியாய்
முடிவற்ற வட்டங்களில்
மூழ்கியிருந்தது விண்வெளியில் ஒரு பருந்து
விரையும் லோடுலாரிகளின்
கனத்த சக்கரங்களின் கீழ்
அரைபடும் நெஞ்சுபோல்
சாலையில் அடிக்கடி கடந்து செல்கிறது
ஒரு வேதனை.
புழுதியும் அழுக்குமாகித்
திரும்பத் திரும்ப மழைக்காகக் காத்திருக்கும்
சாலையோரத்து மரங்கள், குடிசைகள்,
இன்று என் வேதனையை அள்ளமுனையாது
மௌனமாய் உற்று நோக்கும்
காலி உப்புப் பெட்டிகள்.
இஷ்டதெய்வம் ஒன்றின் பெயரை உரக்க விளித்து
வெடித்துவிடும் பழைய நைந்த ஓர் இதயம்
என்னிடமில்லை. எனினும்
கடற்காற்றின் தேவதைகள் பறந்து வந்து
களைத்த என் சொற்களை
ஆழ்ந்த நித்திரைக்குள் போர்த்த முனைகின்றன.
அந்தத் தேவதைகள் புலம்பிக் கொண்டோடும்படி
அவ்வப்போது இரும்புத் தடதடப்புடன்
வந்து நிற்கின்றன லாரிகள்.
வியர்வையில் பளபளத்தபடி
உப்பு சுமக்கும் மனிதர்கள் உதிர்த்த
கறுத்த வசவு வார்த்தைகள்
வெளியெங்கும் தீட்டியிருந்தன
ஓர் அசிங்கமான மௌனத்தை
ஆனாலும் இந்த வெயில்
ஒரு வாளின் பளபளப்பேதான்!
எனினும் வெயிலின் உக்கிரத் தகிப்பு
மழை போலவும் சிதை போலவும்
இவர்களைத் தீண்டுகிறது.
கடல் நீரில் உப்பெடுக்கும் முயற்சியில்
சிதையுள் புகுந்து
சிதையாது, மரிக்காது அல்லது
சிதைந்தும் மரித்தும்
சொல்லொணா வதையுடன்
இங்கே தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறது
மானுட மேன்மை அல்லது
மானுடக் கீழ்மை
எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்
உணர்ச்சித் தளத்தின் வெற்றுக் கூற்றுகள் இவை
ஆனால் இவை கண் கூடானவை:
சிதையில் கருகிய வெண்புறாக்களின்
கரிய நிழல்கள் காகங்களாய்
உயிர் பெற்றுத் திரிவதும்
கட்சிக் கொடிக்கம்பங்களின்
உச்சிநுனியில் நின்றபடி
தன் சுயாதீனக் குரலை ஒலிக்கும்
செடிகளின் ஓயாத சலனம்
காற்றெங்கும் பரப்பிய அமைதியின்மையில்
மீண்டும் ஒரு வேதனை கருக்கொள்வதும்