மவுனமாய் ஒரு சம்பவம்
கால்களை இடறிற்று ஒரு பறவைப்பிணம்
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்
கலவரமுற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகரம்
விரைந்துபோய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்
என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங்கனவோ?
என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்க்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர்ப்பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?
இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கையைப் புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம்மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்
முடிவுறாத காலச் சங்கிலி
தன் கனத்த பெருமூச்சுடன்
கண்ணுக்குப் புலனாகாமல் நிற்கிறதோ,
இப் பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?
ஏதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்துகொண்டிருக்கிறது