உதகை
எங்கிருந்து வந்த்து இவ் வழைப்பென்று
அறியாதே நான் வந்து சேர்ந்தேன்.
உமது பாத இணைகள்மேல் குவியும் ஒரு சிரசுபோல்
உம் அடிவாரம் வந்துநின்றது என் வருகை.
உம் அணைப்பின் குளிர் தொடுகையை எனக்களித்தவாறே
குனிந்து என்னை அள்ளும் உம் கரங்கள்
என்னைத் தூக்கிச் சென்றன
உம் முகமண்டலத்திற்கு.
அங்கே நான் கண்டவை:
சிறகு விரித்த நயனங்களின்
வற்றாத நீரூற்று
பேசும் இதழ்களின்
அரிந்த கனி
அந்த இடம்
மண் ஈர்ப்புக்கு அப்பாலுளதென்பதாலோ
அல்லது மஞ்சுபோல
நான் அவ்வளவு கனமற்றவன் ஆனதாலோ
தைரியமாய்
நீரும் என்னைக் கைவிட்டீர்?
ஓ குருவே
இதோ நான் கைவிட்டவற்றின்
பட்டியல்கள்
அதன் முதல் வரியில் நீர்
(ஏதெனில் உமது பாதம் மண்ணில் பதிந்திருக்கிறது)
எனினும் நான் அறிவேன்
உமது பிராந்தியத்தில்
ஆடைகளின் தூய்மை கூடுதல் காலம் நீடிக்கிறது
செடிபிரிந்த மலர்கள் வெகுநேரம் வாடாதிருக்கின்றன
உண்ணும் பொருள்கள் கெடாதிருக்கின்றன
கனிகள் தம் மேல்தோலைக்
கடினப்படுத்திக் கொள்ளாதிருக்கின்றன
எல்லாம் இனிக்கிறது
இனிப்போ தித்திக்கிறது
என்றாலும் அவை
மரணத்தைத் தம்முள் வைத்திருக்கின்றன