துயில்
ஒளி உதிப்பதை ஒரு நாளும் பார்த்தறியாத நெடுந்துயில்
துக்கம் அதன் குணபாவம்
என்றாலும் உலகத்திரை முழுக்க ஒளி உமிழும் காட்சிகள்
அதன் குணபாவங்களோ சொல்லி முடியவில்லை
கன்னங்கரேலென்ற ஒரு வேலைக்காரப் பெண்ணின்
கைகளில் அசைந்து அசைந்து துலங்குகிறது ஒரு பாத்திரம்
பொறுமையிலும் உழைப்பிலும் சலிப்பிலும்
கசப்பிலும் கூட அது ஒளிர்கிறது
சமயத்தில் அச்சம் தருகிறது
நீண்டுவந்து என்னை உளவுபார்க்கும்
ஒரு விழியின் டார்ச் ஒளி
என் கண்களைக் குருடாக்கும் என உடன் உணர்ந்து
விலகி ஒளியும்.
அது மரு அமைந்த காதலின் உதடுகளில்
ஒரு மின்னலைப் போலத் தோன்றக்கூடியது.
அந்த மரு வளர்ந்து ஒரு கார்மேகம் போல்
இருட்டி நிற்கும் காலம்:
ஒரு துளி மழைநீரில் புவனத்தின் ஒளிவெள்ளம்
ஒரு புல்லின் இதழில் ஒளிரும் பேருவகை
வாழ்வை மேம்படுத்தும் கனவுகளை விரிக்கிறது.
அதில் கூடுகட்டும் நம்பிக்கைகள்
எப்போதும் துயரத்தில் முடிகின்றன
அழகும் மரணமும் நம்பிக்கைகளும் என்று
ஒரு விநோதக் கலவையிலான ஒரு காலைப்பொழுது
எப்படி இருக்கும்?
ஒவ்வொரு கருக்கலும்
என் துக்கத்தின் உருவகமாய் வருகிறது
விரிந்து கிடக்கும் எனது ஜீவ வெளியில்
இருண்ட ஓர் அச்சம் என்னை உறையவைக்கையில்
அரிவாள் பிறை நிலவு
என் சூடான இரத்தத்தை வழியவிடுகிறது
அழகை வழிபடுவதில்தான் புதைந்துள்ளதா விடுதலை?
அல்லது தியாகத்தின் உயிர்ப்பலியிலா?
தலை கவிழ்ந்து கைகூப்பி விழிமூடிப்
பிரார்த்திக்கத் தொடங்குகையில்
நிறுத்து! என அதிர்ந்த குரல் கேட்டு நிமிர்கிறேன்
ஓர் அகோர உரு
நீண்ட கொடும்பற்களும் வாளேந்திய கைகளுமான
உக்ர காளியாய்க் கர்ஜிக்கிறது
என்னை என் இருப்பிடத்திற்கு விரட்டுகிறது
ஒவ்வொரு கருக்கலிலும்
எனது முழங்காலின் ஆறாத ரணத்தைத்
துடைத்து மருந்து கட்டிவிட்டுப் போகிறது
வானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவதை
அந்த பிரம்மாண்டமான அரசு மருத்துவமனையில்
அவள் பணிபுரிகிறாள் எனக் கேள்விப்பட்டு
என் குழந்தைமைக் கால ஞாபகங்களுடன் வந்தவன்
தடுத்து நிறுத்தப்பட்டேன், அந்த உடலிலும் ஆன்மாவிலும்
படிந்துவிட்ட சீரழிவின் அதிர்ச்சியால்
இன்று என் அறையின் ஏகமான இருளில்
தீபஜீவாலை போல் சுடர்கிறது
நி்ர்வாணமான ஒரு மனித உடல்
துக்கத்தின் நாவில் மட்டுமே சொட்டும்
ஒரு தேன்துளிக்கனல் அது.
எனில்
மகிழ்ச்சி என்பதை நான் எதற்காகத் தேட வேண்டும்?
ஒளி உதயம் ஒன்றை நான் ஏன் கனாக் காண வேண்டும்?