கண்ணாடி
நலுங்காத நீரில்
நான் உம்மைக் காட்டினேன்
காலைப் பனித்துளியில்
நான் உம்மைக் காட்டினேன்
எப்போதும் நான் உம்மைப் பிரதிபலித்தேன்
நீரோ உம்மை ஒப்பனை செய்து கொள்வதற்கே
என்னை அணுகினீர்
எல்லாம் அறிந்தவர்போல்
எப்போதும் உமக்கு எண்ணம்
நீர் கண்டதெல்லாம் உம் மூஞ்சியைத்தானே.
கண்டதின் அடிப்படையில் நீர் கதைத்ததுவும்
உம் மூஞ்சியைத் தவிர வேறென்ன?
என்னை அறிந்தீரா?
கனத்த ஒரு மௌனம்தான் நான் என
உதறினீர்
உலகை ஒரு கேளிக்கைக்கூடமாகவும்
அஞ்சி ஒளிபவர்களின் புகலிடமாகவும்
மாற்றினீர்
சாதனைகள் செய்யத் துடித்து எழுந்து
அப்புறம் சலிக்கிறீர்:
செத்துத் தொலைக்கலாம், இல்லை,
வாழ்ந்தே தொலைக்கலாம் என்று.
இன்று உம் முன்னால் நான் ஒரு
நட்சத்திரம் நிறைந்த ஆகாயம்.
அசக்தனான நீர்தான் இப்போது
உமது அனுபவங்களின் சவ ஊர்வலத்தை
என்மீது நடத்துகிறீர்; நானல்ல.
இன்று உம் உயிராசையும் உம்மைக் கைவிட்டிருக்க
அவநம்பிக்கையின் தளர்ச்சியிலிருந்து
உம்மைப் பற்றி இழுக்கிறது
கருணை, அழகு எனும் பிதற்றல்களுக்கெல்லாம்
அகப்படாத ஓர் அற்புதம்!
அதை நிகழ்த்துவதும் நீர் தான் என்று
முடிவு செய்ய முடியாதபடிக்கு இருக்கிறதா அது?
உடனே நான்தான் அது என்ற
முடிவுக்கு வருகிறீரா?
வேண்டாம்
எந்த ஒரு முடிவுக்கும் நீர் வரவேண்டாம்
உம் நினைவிலும் கூட எனக்குச் சிலை வைத்துவிடாது
போம் அதைப் பின்தொடர்ந்து.
உமது முடிவுகளிலும் உமது சிலைகளிலும்
தெரியப்போவது உம் மூஞ்சிதான்; நானல்ல