Friday, March 8, 2013

வீதி

மாறப்போகும் எங்கள் வீடு
ஒரு கை வண்டியாய்க் குவிந்து
முடிவற்று இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது;
பக்கலில் பிஞ்சுக் கால்களோடு நான்;
பத்திரம் கருதி
அப்பா என் கையில் கொடுத்திருந்தார்
கரி பிடித்த எரியாத ஒரு சிம்னி விளக்கை.
என் நெஞ்செலும்புக் கூட்டுக்குள்
இன்று அந்த விளக்கு.
கெட்டித்தார் இளக்கும் அக்கினிப் பிழம்பு

பூவரச மரத்திலிருந்து ஒடித்த
குச்சியுடன் நிற்கிறார் அப்பா;
வீதி நெடுக அழுத்தமானதோர் கோடு இழுத்தபடி
கதறக் கதற அக்கா என்னைப்
பள்ளிக்கூடம் இழுத்துச் செல்கிறாள்.
அப்புறம் என்னாயிற்று எனது குரல்வளைக்கு?
வாயை அடைத்தது,
வானத்தில் எரிந்து நின்ற எனது முதல் கதறல்?
நகரின் பிரதான சாலையிலிருக்கும்
நண்பனின் தங்க நகை மாளிகையிலிருந்து கொண்டு
சாலையில் செல்லும் சவ ஊர்வலத்தை
வெறித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே
பால்யத்திலிருந்தே என்னை விடாது தொற்றி வரும் ’அது’,
மற்றும் தூளியில் ஒரு பிணமாய்ப் போய்க்கொண்டிருக்கும் நான்

எரியும் விளக்கோடு ஒரு நாள் நடந்தபோது
என் பக்கலில் வந்துகொண்டிருந்தது
வீடு அல்ல; அதுதான் என அறிந்தேன்.
அன்றுதான் நான் என் நத்தையின் பாடலை எழுதினேன்.
எனினும், பூர்த்தியாகாத அழகின் லட்சியம்போல்
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து கொண்டு
தம் புறம் எட்டாமையின் போதமில்லாது
கதைத்தபடி இருக்கும் தங்க நகைகள்
என்னுள் குமைகின்றன மீண்டும் மீண்டும்.
தலைச்சுமைகள் கூவும் வீதியில்
பாடல் முட்டையிட்டிருக்கும் என் தொண்டைக்குள்ளிருந்து
கிளம்ப மறுக்கிறது கூவல்.
டீ அடிப்பவனின் கைகளில் புகுந்து
அம்ருதத் துளிகளை
ஃபில்டரிலிருந்து இறக்கிக்கொண்டிருக்கிறது அது.
தெருப் பைப்பிலிருந்து ஒரு பெண்
தங்கக் குடத்தில் தண்ணீர் பிடித்துச் செல்பவளாய்
சாலையைக் கடக்கிறாள்.
பேராசையையும் காமத்தையும்
கேளி்க்கையின் ஜரிகை ஆடையால் மறைத்துக்கொண்டு
கூவி அழைக்கும் சினிமாச் சுவரொட்டிகள்.
மிகை அலங்காரத்துடன் நிற்பவளின் விழிகளிலிருந்து
வீதியெங்கும் விரிந்துள்ள காமவலை

டீ தூக்கிச் செல்லும் சிறுவன்
போக்குவரத்தினால் மோதிச் சிதறியவற்றிற்காக அதிர்கிறான்
பெகு கவனமாய்ச் சாலையைக் கடக்கும்
பள்ளிச் சிறுமியின் கையில் பயமற்றுத்
துள்ளிச் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவள் தம்பி
எங்கும், பஸ் சக்கரத்திற்குள் அரைபடுவதற்கு முன்
சாலை நடுவே காணப்படும் ஒரு பூவின் துல்லியம்;
வயிற்றுச் சதையைக் கீறிக் கொள்வதற்கு முன்
பார்க்கப்படும் கத்தியின் விளிம்பாய்க் கனலும் ஒரு கூர்மை.
இரவிலிருந்து ஒலிக்கும் ஓர் அழுகைக் குரலாய்,
ஒளி அதிகமானவுடன், கருங்கூந்தலின் ஹேர்பின்னில்
கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.
நடுரோட்டில் நட்சத்ரமீன் வடிவில் ஒளிரும் ஒரு மரணம்

விதிகளிலிருந்து தப்பித்து ஓட முயன்ற மனிதனை
அடித்து நிறுத்தியிருக்கிறது ஒரு விபத்து.
விதியும் வீதியும் வேறுவேறல்ல என்பதை
இரத்தம் இது, சதை இது எனக் கொடூரமாய்
பிரித்து விளக்கிக் காட்டி நிற்கும் ஒரு செய்முறைப்பாடம்.
தூரத்துப் பறவையின் குரலாய்
ஒலிக்கும் ஒரு நாடோடிப் பாடல்:
”சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணு விழிப்போம்...”

எல்லாவற்றையும் கபளீகரம் செய்துகொண்டு
இளித்துக்கொண்டு நிற்கிறது பிரக்ஞையின்மை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP