பாறைகள்
மண்ணின் முகத்தில் பாளம்பாளமான
கீறல்களை விதைக்கிறது
இன்று என் ஆசுவாசத்தின்
குரல்வளையை நெரிக்கும்
என் முதல் கதறல் படிந்த ஆகாயத்திலிருந்து
அக்னித் திராவகமாயப் பெய்யும் ஒளி
இரத்தவெறி கொண்ட சரித்திரத்தின்
பாறைகளில் இடறிவிழுந்து
நானும் என் முழங்கால்களைச் சிராய்த்துக்கொள்கிறேன்
என் சீற்றம், என் சிந்தனை, என் கவிதைகள்
எதையுமே ஏளனம் செய்வதாய் நிற்கின்ற
பாறைகளின் பின்னிருந்து மெதுவாய் எட்டிப்பார்க்கிறது
குழந்தையொன்றின் உதயமுகம்
ஒளிந்து ஓடிப்பிடித்து விளையாடும் குழந்தைகளாய்
வளைய வந்த என் உணர்வுகள் களைத்து
அப்பாறைகளின் மேல் சிற்பங்களைப்போல் அமர்ந்து
மூச்சுவாங்குகின்றன
பாறைகளிடையே சிற்றுலா வந்த எங்களுடன்
மரணமும் வனபோஜனத்தில் அமர்கிறது
பாறைகளின் அருவருப்பான பயங்கரமான மௌனத்தை
எங்கள் சிநேகப் பரிவர்த்தனை ஒலிகள் –
முகாமிடத்தைச் சௌகரியப்படுத்தியது போல் –
துப்புரவாக்கி சகஜப்படுத்திக் கொண்டிருக்கின்றன
காலம், ஒற்றைக் காலில் நின்றபடி
ஒரு கோடி நாவசைத்து
வெறுமையை உச்சரித்துக் கொண்டிருக்கும் –
எங்கள் தளம் விரிக்கப்பட்ட – மரக்குடை;
அதன் மற்றொரு கால்
மேகப் பொதிகளாகி வானில் பறக்கமுடியாத
பாறைகளின் பாரமாய் என் நெஞ்சை மிதித்து நிற்கிறது.
என் காயங்களை வருடுகிறது
ஆகாசப் பறவையின் சிறகுக் காற்று.
ஆறாத புண்ணொன்று தன் மாயவலியுடன் வந்து
என் முழங்கால் புண்ணுக்கு மருத்துவம் பார்க்கிறது.
தெள்ளிய நீரோடை ஒன்றைத்
தாகிக்கும் என் குரல்வளையை நெரிக்கின்றன
மரணத்தின் விரல்கள்