நதி
கவனிப்பாரற்ற அனாதைப் பிணத்தின்
கண்வழி நீராய்க்
கிடந்தது நதி
நான் தாகம் தீர்த்தேன்; கைகால் முகம் கழுவினேன்;
மார்புக் கதுப்பின் மணற்கரையில் நடந்து அமர்ந்தேன்.
ஆடை களைந்து ஆனந்தக் குளியலும் கொண்டுள்ளேன்.
என்றாலும் களையவே முடியாததாயிருந்தது
என் எல்லாச் செயல்களிலும் கலந்திருந்த
வேதனையானதொரு மௌனம்
நான் இருக்கும் இடம் குறித்து
எப்போதும் எழும் என் கேள்விகள்
பதில்களைத் தாங்களே தேடிக்கொள்கின்றன
ஒரு காட்டு விலங்கு தன் இரையைத் தேடிக்கொள்வதுபோல.
ஆகவே அவை பற்றிக் கவலையில்லை
தானாகவே ஒரு மாயக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு
இந்தக் கண்ணீரின் கரையோரமாய்த் தொடங்கி
ஒரு தீர்த்தயாத்திரை செல்கிறது என் உயிர்.
வழி நெடுக
கடவுளின் பிணம் நாறும் கோவில்களின்
நிரம்பிவழியும் குப்பைத் தொட்டி ஜனத்திரள்;
நவீனத் தொழில்நுட்ப வசதிகளால்
அலங்கரிக்கப்பட்ட கல்லறை வீடுகள்;
தொழிற்சாலைகளால் வசப்படுத்தப்பட்டுவிட்ட
அடிமை இல்லங்கள்;
உலகப் பொருள்களின் சந்தையான
நகரின் பிரதான சாலையூடே
அஞ்சி ஊளையிட்டுக் கொண்டோடும் காற்று.
புறப்பட்ட இடத்திற்கே அல்லது
புறப்பட்ட இடம் போன்ற இன்னொரு இடத்திற்கே
திரும்பத் திரும்ப வந்து சேரும் ’பேருந்துகள்’
எக்காலமும் போலில்லாது
மலைமலையாய்க் குவியும் மனிதக்கழிவுகள்
எல்லாம் கலந்து
மாசடைந்து கிடக்கும் நதி
பொங்கும் கண்ணீர் ஊற்று ஒன்றே
இம்மாசுகளைச் சற்றேனும் நகர்த்தும்
ஓர் இயக்கமாயிருக்கிறது
பிணமானவனின் தோள்மலைகள் கண்டு விம்மினேன்
காடு, மலை, பாலை, சதுப்பு, சமவெளி நிலமெங்கும்
பிணத்தை, அதன் மாமிசத்திற்காகப்
பிறாண்டிப் பிய்க்கும் மிருகங்களைப்போல்
கோரமான உழைப்பில் ஈடுபட்டிருந்த
மனிதர்களைக் கண்டேன்
எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் நான்?
கண்ணீர் உகுக்கும் பிணத்தின்
ஊற்றுக்கண் தேடியா என் யாத்திரை?
ஆழந்காண முடியாத முடிவற்ற வானமாம்
என் அகத்திலல்லவா இருக்கிறது அது?
மாயக் கவர்ச்சியால் உந்தப்பட்டும் ஈர்க்கப்பட்டும்
நான் நடக்கிறேன்
பேராசையாலும் விஞ்ஞானத்தாலும் சீரழிந்த
இந்த நிண உலகின் நாற்றம் அணுகாததும்
பெரிய போபுரங்களில்லாததும் ஒரு தேர்க்கொடி பறக்காததுமான
ஓர் ஆதர்ச மாதிரிக் கிராமத்தை நோக்கி
அதற்குரிய காட்டுப்பாதைத் தடத்திலே நான் போனேன்
கிழக்கிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தது
ஒரு மாட்டுவண்டி
ஒளிபரக்க உதித்து வரும் சூரியனைப்போல்
முகம் அவனுக்கு; ஃபேன்ஸி பனியனில்
’ஏகப்பட்ட சந்தோஷம்’ என்ற எழுத்துக்கள்.
நான் வாய்விட்டு வாசித்த போது
”என் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா?”
என்கிறான் அவன்.
செல்வகுமாரனே! அதுதானே உன் பெயர்?
பாவியாகிய இந்தப் பொருளுலகில் நான்
திருவிழாப் பொருட்காட்சிக் கூட்டத்தில்
பெற்றோரைத் தவறவிட்டு அலறும் குழந்தை
செல்வகுமாரனே! அன்று உன் ஓலைக்கூரையின் கீழ்
நான் இதுவரை அனுபவித்திராத அமைதியைக் கண்டேன்
என்றாலும்
மரணத்தைப் பற்றியும் கண்ணீரைப்பற்றியும்
நான் உனக்குச் சொல்லிவிட்டு அகல்கிறேன்