மரணச் செய்தி
இரவோ பகலோ எவ்வேளையானாலும்
வானத்தைப் பார்த்துக் காலத்தை கவனித்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
எரிஎண்ணெய் எரிவாயுச் சமையல்
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத
அந்த மனிதன் இறந்துவிட்டான்
காலுக்குத் தவறாது செருப்பணிவதையும்
காய்ச்சலுக்கு டாக்டரை அணுகுவதையும்
அந்நியமாய் உணர்ந்த
அந்த மனிதன் இறந்துவி்ட்டான்
மின்னல் மழைக் காடுகளில்
கருக்கலோடு போய் காளான் சேகரிப்பதற்கும்
நிலா நிறைந்த குளம் குட்டைகளில்
ராவெல்லாம் தூண்டில் போடுவதற்கும்
காடுகள் கொடிகள் படர்ந்து பச்சித்திருக்கையில்
கோவங்காய்கள் சேகரிக்கவுமாய் வாழ்ந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
சேமிப்பை அறியாதவனும்
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனுமான
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பூட்டத் தேவையில்லா வீட்டை வைத்திருந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பனிக்கும் மழைக்கும் மட்டுமே
முற்றத்தைவிட்டு வீட்டுக்குள் துயின்ற
அந்த மனிதன் இறந்துவிட்டான்
பருவம் தோறும் ஒரு படர்கொடியால்
முற்றத்தில் பந்தலிட்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தான் குளிக்கும் நீர் கொண்டே
தன் முற்றம் குளிரும் ஓர் ஈரவிரிப்பை
நாள்தோறும் நெய்துவந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
ஆலைச் சங்கொலியையும்
ஆயிரமாய் விரையும் மனிதர்களையும்
ராட்சஸ இயந்திரங்களையும் கண்டு மிரண்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தனது முதல் வணக்கத்தைச்
சூரியனுக்குச் செய்துவந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தானே மண் குழைத்துத் தன் கையாலேயே
தன் வீட்டைக் கட்டிக்கொண்ட
அந்த மனிதன் இறந்துவிட்டான்
தன் பிள்ளைகளின் ’முன்னேற்ற’த்தைக் கண்டே
அஞ்சியவன் போல் ஒதுங்கி வாழ்ந்த
அந்த மனிதன் இறந்துவிட்டான்