குடி (பூமியெனும் பூதத்தின் இரத்தத்தினால் தயாரிக்கப்பட்டது)
காமத்தின் வெக்கையும் அதன் ஸ்வப்ன ஸ்கலிதமும்.
காதலின் ஆலிங்கனம் பற்றிய கனவு.
கடிகார முள்ளில் தொங்கியபடி
காலம் கெட்டுவிட்டதென அரற்றும் கோமாளியும்
அவன் வாசலில் வந்து நிற்கும் சவ்வண்டியும்.
பாரவண்டி ஏறிப் பிதுங்கிய அகாலப் பிரசவம்.
ஹைபிரிட் காய்கனிகள், ஹைபிரிட் முலைகள்,
மற்றும் ஹைபிரிட் ஆண்குறிகளின் அமோக விளைச்சல்
விபசாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்கம்.
கொல்லும் விஷங்களினால் நிறுவப்படும் அரண்கள்.
வன்முறைக்காளான பெண்ணின்
உடல் பொசுங்கும் நெடி.
கருவிலேயே கொலையுறும் பெண்சிசுக்கள்.
கழிவு நீர் பீச்சும் முலைகள்.
சித்தம் கலங்குவது போலிருக்கிறது நண்பனே
இன்னும் கொஞ்சம் ஊற்று
உரித்த பழம்! உருவின கீரை! துருவின தேங்காய்! என
பாலிதீன் பைகளில் அடைக்கும் இயந்திரங்களின் வேகம்.
அகந்தையின் ஊளைகளிலிருந்து அதிரும் மேடை முழக்கங்கள்.
ரணகளத்தின் மீது மிதக்கும் சிம்மாசனங்கள்.
சிறகு முளைக்குமுன் கொல்லப்பட்ட ஜீவன்களின்
மரணவாடை வீசும் பட்டாடை.
புண்ணின் சீழ்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஷாம்பூ
அழியும் காடுகளின் பச்சை இரத்தம்.
மயானத்தின் மௌனத்தில் ஒலிக்கும்
மரித்தோர்களின் கூட்டுக்கீதம்.
ஏழைகளின் தனிமை.
அறிவாளியின் திமிர்.
மூடனின் சாமர்த்தியம்.
மிதிக்கப்பட்டுக் கிடக்கும் மனிதனின் பொறுமல்.
இன்னும் ஒதுக்கப்படும் மனிதனின் ஆறாத சினம்.
ஞானியின் வேதனை.
சொல்லில் முடிந்தவைகளில் நம்பிக்கை வைக்கும்
கலைஞனின் நாறும் வியர்வை.
நிதர்சன நெருப்பும் அதனுள்ளிருந்து
எழும் தரிசன நிலவும்.
பதறும் நோயாளி முன்
தீர்க்கமான அமைதியுடன் இயங்கும்
மருத்துவனின் முகத்தில் ஒளிரும் பிரகிருதியின் அழகு.
கருப்பொறி இயல் வல்லுநனின்
கருவுக்குள் நுழைய முன்னேறும் கவிதை...
எல்லாம் எல்லாம் எல்லாம் ஆக்கிரமிப்புகளே இன்று!
ஆக்கிரமிப்புகளைச் சவட்டும்
புல்டோசர்களின் வடிவில்காலம்...
சித்தம் அழிவது போலிருக்கிறது, நண்பனே,
போதும்; இது எத்தனையாவது கிளாஸ்?