நத்தையின் பாடல்
யாத்ரீகனுக்கு எதற்குக் காணிநிலம்?
என்றாலும் எனக்கும் ஒரு வீடுண்டு
பூமியில் அஸ்திவாரம் கொள்ளாமல்
தானே எழும்பியுள்ளது அந்த வீடு
எங்கும் இறக்கிவைக்காது
என் முதுகின்மேலே சுமந்து செல்வேன்
அந்த வீட்டை
சொர்க்கம் எனும் வீட்டின் சொந்தக்காரராமே
அந்தக் கடவுளை நான் பார்த்துவிட்டேன்
அவரது ஏதேன் தோட்டத்தில் வைத்து
நெடுநேரம் அவரோடு உரையாடியும் உள்ளேன்
நல்லதொரு நண்பர்தாம், பாவம்
சாத்தான் மட்டும் இல்லையெனில்
இனிதாகவே இருந்திருக்கும் அவர் உலகம்
சாத்தானை அறியாதார் யார்?
கடவுளை நான் கண்டுகொள்ளாதது குறித்துக்
கடுங்கோபம் அவனுக்கு என் மீது
”நீ பெரிய புடுங்கியோ?” என்கிறான்
எளியவன் நான்
என்றாலும்
வானம் என் தலைமீது
ஒரு பதாகை போல்
காற்று அப்பதாகை மீது
ஒரு மரக்கிளைபோல்
காலம் அம்மரக்கிளை மீது
ஒரு பறவைபோல்
வாழ்வு அப்பறவை மீது
ஒரு பாடல்போல்
மரணம் அப்பாடல் மீது
ஒரு வீடுபோல்
அப்பாடலும்
பூமியில் அஸ்திவாரம் கொள்ளாத தன் வீட்டை
எங்கும் இறக்கிவைப்பதில்லை
வெளியெங்கும் வியாபிக்கும் அப்பாடல்
பூமியின் சகலத்திலும் படியத் துடிக்கும்
பூமியில் அஸ்திவாரம்கொண்ட
சாத்தான் மற்றும் கடவுளின் வீடுகள் மீதும்!