குடை
1.
மனிதனை இறுதியாய்க் காப்பதற்கும்
இந்தக் குடைகளைவிட்டால்
வேறுவழி கிடையாது
இந்தக் குடைகளுக்கும் ஆசைகளுண்டு.
மனிதர்களிடமிருந்து பிய்த்துக்கொண்டோடி
மழைவெளிகளில் நனைந்து திரிய
சாலைகளில் நடனமாட
ஸ்கேட்டிங் போக
கடலைப் பார்த்தபடி
மழையில் நனைந்துகொண்டேயிருக்கும்
பாறைகளைப் போய் பார்க்க
ஆறு, மழையை முழுசாய் எதிர்கொள்ளும்
அற்புதத்தைக் காண
இந்த ஆசைகளுக்கெல்லாம் உள்வழிச் சாலைகளுண்டு
அதுவே கடவுள் உலாப் போகும் பாதை
கவிதை அமைந்திருக்கும் சுரங்கக் குகை
உண்மைப் புரட்சிவாதிகளின் தலைமறைவுப்பிரதேசம்
2.
யுத்தமழையா? மழையுத்தமா?
மிரண்ட குதிரைமேல்
போர் உடைதரித்த வீரனின் உருவிய வாள்
ஒரு பாட்டன் குடையாய் விரிகிறது
காலடியில் இசைக்கத் துவங்குகிறது
மத்தள பூமி
3.
கையில் குடையுடன் நிற்கிறான் அவன்.
இதய நெருப்பிலிருந்து
பொங்கி எழுந்த மலராய்
தன்மீது தானே
கருணையைப் பொழிந்து நிற்கும் அதனைப்
பத்திரத்தோடும் பரவசத்தோடும்
பற்றி அணைத்துக்கொண்டிருக்கும் முஷ்டி
ஆயிரந்தலைச் சர்ப்பக்காற்று சீறுகிறது
முஷ்டியிலுள்ள குடை ஒரு வாளாய்க் குவிந்து
தன் சுழற்சியால் விரிகிறது மனிதனைச் சுற்றி