Sunday, September 30, 2012

சான்றாண்மை

காலைக் கதிரவனும் எழுச்சியில்
அடிவானப் படுக்கையிலே.

”அல்லற்பட்டு ஆற்றாது
அழுத் கண்ணீரன்றோ
செல்வத்தைத் தேய்க்கும்படை”

”ஊசியின் காதில்
ஒட்டகம் நுழைந்தாலும்
செல்வந்தன் சொர்க்கத்துள்
நுழையவே முடியாது”

என்பதெல்லாம்
கண்ணீரும் புன்னகையுமாய்
காயங்களின் மருந்தாவார்
வயிற்றெரிச்சலும் வேதனையுமின்றி
வேறென்ன?

எழிலும் எழிற் பின்னிற்கும்
இயற்கையுமோ
அன்னவர்க்கும் மருந்தாவர்?

ஊடுறுவும் ஒளியில்
ஒளிரும் பொன் இலைகள்.

குழந்தையும் தெய்வமும்

கடவுள்,
தன் மாண்புகளின்
வேதனைகளையெல்லாம் விடுத்து
சற்றே இளைப்பாறவோ,
ஒரு சிறிய இனக்குழுக் குடும்பத்தில்
பிறந்து தவழ்கிறார்?
தனது பிஞ்சுக் கரங்களால்
வேட்கையுடன்
ஒரு மலரைப் பறிக்கிறார்?
தன்னைச் சூழ்ந்துள்ளவர்களைப் பார்த்து
நாம் என்கிறார்?

திடுக்குற்று விழித்தெழுந்தவரோ
காதலின் அடையாளமாய்
மீண்டும்
அம்மலரைத் தன் அன்பர்களுக்களிக்கிறார்?
நாம் என்ற சொல்லால்
அனைத்து உயிரினங்களையும்
அணைத்துக் கொள்கிறார்?
துயருக்குள் இழுத்துச் செல்லப்படுகிறார்?

Saturday, September 29, 2012

பள்ளமும் வெள்ளமும்

துயில்வோர் அறியாத
நள்ளிரவுப் பெருமழையோ?

வீதி பெருகி
வீட்டுள்ளே புகுந்திட்ட
வெள்ளமோ?

வீடுகள் பலரது மத்தியில்
தாழ்ந்து நிற்கும்
வீட்டுள் மட்டும்
உறும் விருந்தோ?

தாழ்ந்தும்
தரைவிடாதிருக்கும்
தரையினைத்
தேய்க்கும் படையோ?

பின் நகர்ந்த வெள்ளம்தான்
விரும்பும்போதெல்லாம் பாய்ந்துவர
வடித்துச் சென்றிருக்கும் பள்ளமோ?

பெருமழையும் வெள்ளமும்
எப்போதும் இரைந்து கொண்டிருக்கும்
வெற்றிடமோ?

யாருக்கும் தெரியாத
அவன் தவிப்பும் தத்தளிப்பும்
இன்பமும் பெறுபேறுகளுமோ?

அவ்வளவுதான் விஷயம்

நம் வன்கொடுங் கொலைவாள்களெல்லாம்
வருந்திக் கழன்றுதிர,
வான் ஒளிர்த்தும் கைகளெல்லாம்
மிதந்து இனிதாய் மேலெழும்ப,
தனக்கேயுரிய மாபெரும் அசட்டுத்தனத்துடன் முயலும்
குழந்தையின் கையிலுள்ள பொம்மைத் துப்பாக்கி!

நம்மிஷ்டம் நம் சுதந்திரம்
எதற்கும் தடையில்லை.
ஆனால் நாம் அக் குழந்தையை அழித்துவிடுவது
பொருட்படுத்தாது கடந்து சென்று விடுவது
எல்லாமே ஒன்றுதான்.

Friday, September 28, 2012

அந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய அந்தப் பிரகாரத்தில்தான்…

கோயில் மாநகரின்
பெருங் கோயில் எங்கும்
சோர்ந்துவிடாத மனிதர் கூட்டம்.

பொழுதுபோக்கு
சுற்றுலாக் கவர்ச்சி
கலை
மானுட ஆற்றல்
பக்தி, வியாபாரம்
பிழைப்பு, தந்திரம்
யாவற்றையும் பார்த்தபடி
கல்லாய் உறைந்திருந்தது
கோயில்.
கோயில் தெப்பக்குளத்தில்
மாட்டிக்கொண்ட நீராய்
நெகிழ்ந்திருந்தது
காதல்.
சுற்றி
வான் நோக்கிய படிக்கட்டுகளில்
அமர்ந்தன
கோயில் சுற்றிக் சடைந்த கால்கள்.

அந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய
அதைப் பிரகாரத்தில்தான்
கண்டேன் நான் ஒரு பெண்ணிடம்:
பேரரசின் இளவரசி
தன் சுகமஞ்சத்தில் சாய்ந்தபடி
அளக்கவொண்ணா எழிலும்
அடங்காத காதலும்
அழிவிலாத மெய்மையுமாய்
மிளிரும் தன் விழிகளால்
இவ்வுலகைப் பார்த்துக் கொண்டிருந்ததை.

ஆனால், வாழ்க்கை நம்மை முற்றிலுமாய்க் கைவிட்டுவிடவில்லையே

அலுவலகத்தின்
இடைவேளைத் தனிமை
ஏதாவது ஒன்றில்
அவன் ஏழுதிக் கொண்டிருப்பதைக் கண்டால்
மேலிடத்திற்குப் போகும் பயங்கரமான
புகார்க் கடிதமோ அது என அஞ்சுகிறார்கள்.

நெருக்கடியான நிலைமைகள்
அரசுக்கு ஏற்படுகையிலெல்லாம்
அதற்குக் காரணம் அவன்தானோ என்று
சந்தேகிக்கவும் துன்புறுத்தவும் படுகிறது
அவனது தனிமை.

எந்தக் கூட்டமும் அவன் வருகையை
ஓர் உளவாளியைப் போல்
அஞ்சுகிறது.

ஆனால் அவன் இல்லத்தாள் மட்டும்
அவன் அத்துணை தீவிரத்துடன் எழுதிக் கொண்டிருப்பதை
தன் வாழ்வுக்கு உலை வைத்துவிடும்
களங்கமுடையதோர் கடிதமாயிருக்குமோ என
ஒருநாளும் அஞ்சுவதில்லை.
அவனது சுதந்திரப் பெருவெளியையும்
ஆங்கு சிறகடிக்கும் கவிதையையும்
அவனது எண்ணற்ற வாசகர்களின்
இலக்கியப் பிரதிநிதியே போல்
அவள் நன்கு அறிந்தவளாதலால்!

Thursday, September 27, 2012

வழி கேட்டுச் சென்றவள்

வெளியின் அழகில் அமிழ்ந்துபோய்
வெறுமைகொண்ட நெஞ்சினனாய்
அவன் தெருவாசலில் நின்றுகொண்டிருந்த கோலமோ
அத்துணை தெளிவும் தேவையும்
தேடலுமாய்ச் சென்று கொண்டிருந்தவளை
நிறுத்தி
இங்கே அம்ருத விலாஸ் கல்யாண மண்டபம்
எங்கே இருக்கிறது என
அவனிடம் கேட்கவைத்தது?

அவள் கேட்டதும்
அதற்காகவே காத்திருந்தவன்போலும்
இல்லைபோலும்
தோன்றுமொரு நிதானத்துடன் அவன்
வழிசுட்டியதும்
ஆங்கே அப்போது நிகழ்ந்த
நிறைவமைதியும் தான்
எத்தனை அற்புதம்!

அவளது அழகும் இளமையும்
அவனைத் தீண்டியதும்
அவனைத் தீண்டியதென்ற மெய்மை
அவளைத் தீண்டியதும்
ஆங்கே முகிழ்த்த இன்பத்தை
அவ்விடத்திற்கே கொடையளித்துவிட்டு அவள்
மேற்சென்றதும்தான்
எத்தகைய கூடுதல் அற்புதம் அன்றையப் பொழுதில்!

அச்சமும் பதற்றமும் நிராசையுமாய்ப்
புகைந்து கொண்டிருக்கும்
கலவரபூமியிலா நடக்கிறது இது என
விலகி நின்ற அவன் விழிகள்
வியந்து கொண்டிருக்கையில்
நேற்றுவைக்கப்பட்ட குண்டுவெடிப்பில்
உடல் சிதறி இறந்தாள் அவள்.
என்றாலும்
நாளை மலரப்போகும்
அமிர்த விலாசத்திற்காய்
இக் கவிதையில் உறைகிறாள் அவள்.

எந்த வைரத்திற்கு

எந்த வைரத்திற்குக்
குறைந்தது, என் அன்பே
இதோ
நம் இல்லத்தின்
இந்த ஜன்னல் கண்ணாடியில்
ஒளிரும் சூர்ய ஒளி!

Wednesday, September 26, 2012

வளையம்

ஒரு வளையம்
உலகிலுள்ள புள்ளிகளையெல்லாம்
நிறுத்திவைத்த
வினோதத் தரவரிசை – அதில்
கடைசிப் புள்ளியும் முதற் புள்ளியுமன்றோ
ஒருவரையொருவர் நன்கு உணரமுடிகிற
ஓரிடத்தில் இருக்கிறார்கள்.

முதற் புள்ளி எது
கடைசிப் புள்ளி எது
அதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
எங்கு வேண்டுமானாலும்
கத்தியைப் போட்டுப் பார்
எந்த இடத்திலும் இருக்கிறது
முதற் புள்ளியும்
கடைசிப் புள்ளியும்.

அடடா! என்ன வெட்கம்!
இவ்வளவு எளிய உண்மையினைக் காண
இத்தனை பாடு!
வளையத்தின் எந்தப் புள்ளியையும்
கத்திமுனை தொட்டுத் தொட்டு அதிர்கிறது
ஒவ்வொரு புள்ளியுமே
முதற் புள்ளியும் கடைசிப் புள்ளியுமாய்
இருப்பதைக் கண்டு.

நல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…

அவளை அமரச் செய்துவிட்டு
படகுச் சவாரிக்குச்
சீட்டு பெற்றுக் கொண்டிருக்கும்
நெடிய வரிசையில் போய்
நின்று கொண்டான் அவன்.

நெஞ்சை அள்ளும்
அத்தனை நிலக்காட்சிகளோடும்
ஒத்தமைந்த ஓர் பேரழகாய்
சுற்றுலா வந்த கூட்டத்துள்
அவள் தென்பட்டாள்!
ஒரு மானிடப் பெண்!
அணங்கு!
சின்னச் சின்னப் பார்வைகளால்
துயருற்றகன்றுவிடாத தெய்வீகம்!

காதலின்பத்தாலும் மகிழ்வாலும்
பேரொலி வீசிய வதனம்,
மானுடத் துயரால்
மட்டுப் படுத்தப்பட்டாற் போல்
மிளிரும் இதம்!
வெளித்தெரியாத சின்னான் கருவாய்
தேவகுமாரனைத் தாங்கி நிற்கும் கன்னி?
விழியகற்றவியலாது
வாழ்நாள் முழுமைக்குமாய்
விழிநிறைத்து நிற்கும் ஓவியம்

மிகச்சரியான துணைவன்
அவளைத் தேர்ந்தெடுத்துள்ளான்
என்பதன் காரணமோ?
மிகச் சரியான இடத்தில்
அவன் அவளை அமர்த்திவிட்டுச்
சென்றுள்ளான் என்பதே அதன் காரணமோ?
யாவற்றிற்கும் மேலாய்
வானம் தந்த ஊக்கமனைத்தையும் பெற்று
பெருவல்லமையுடன்
வானிலும் பூமியிலுமாய்
வளர்ந்து கிளைத்து விரிந்து
தற்போது அவளைத் தன்மடியில்
கொண்டிருக்கும் அம்மரத்தின் பிரம்மாண்டம்
அவளைத் தீண்டிப் புகட்டியிருந்ததாலோ?
பேரியற்கையின் பிறிதொரு உன்னத சிருஷ்டியாய்
எவ்விதமோ
அவள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதாலோ?
அன்றி
வேதனை கொண்டதோர் உள்ளத்தின்
கானல்நீருக் காட்சிதானோ?

Tuesday, September 25, 2012

அழுக்குத் தெருவும் அணியிழை மாந்தரும்

இந்தக் கரியநிறப் பறவைகள்
குப்பைக் குவியலிலிருந்து
செத்த பெருச்சாளி ஒன்றை
நடுவீதியில் இழுத்துப் போட்டு
என்ன செய்முறைப் பாடவிளக்கம்
தந்து கொண்டிருக்கின்றன?
போவோர் வருவோர்க்குப் பயந்து பயந்தே
--ஆனாலும் துணிச்சல்தான்-
நடுவீதியில் வைத்து
நகரத்துப் பெருச்சாளிகளின் இரகசியத்தை
அகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறதாகப் பேச்சு.
அங்கே
தெருக் குப்பைகள் காற்றோடு கூடி
நம் அவலக் கதைகளினைப் பேசிப் புலம்புவதை
நாசி சுளிக்க கேட்டிருக்கிறீர்களா?
குப்பைகளை வீதியில் விதைத்தால்
வீதியும் உங்களுக்குக்
குப்பைகளைத்தானே தரும் என்று
அவை நம்மைப் பார்த்து முறைப்பதைப்
பார்த்திருக்கிறீர்களா?
’அழகழகான இல்லத்தரசிகளா இப்படி!’
என்று தம் அழகுணர்ச்சி அடிவாங்கி
மண்ணைக் கவ்வி
எழுந்திருக்கவே முடியாமல் விழுந்து கிடப்பதைக்
காணுங்கள்.
எத்தனை பெரிய பொய் இது,
இந்தப் பெண்கள் தங்கள் வீட்டையும்
உடலையும் மனதையும்
தூய அழகுடன் வைத்திருக்கிறார்கள் என்பது!
வீசிவிட்டுப் புறங்காட்டிப் போய்க்கொண்டிருந்த
பெண்ணைச் சில அடிகள் தொடர்ந்து
துவண்டு நின்றுவிட்ட
குப்பைச் சுருள் ஒன்று
இனி எழுந்திருக்க முடியாத
மோக பங்கத்தில்!
விளக்குமாறும் கையுமாய்
வீட்டுமுற்றத்துக்குள்ளே, மரத்திலிருந்து
ஒரு இலை விழுவதைப் பொறுக்காத வன்மத்துடன்
வீதிக்கு முதுகு காட்டுவார்!
எத்தனை நேர்த்தி, எத்தனை கச்சிதம்,
எத்தனை வன்மம் தங்களை மட்டும்
அழகு செய்து கொள்ளுவார் தகைமை!

* ’நீ திரும்ப,
உன் முகமே தஞ்சமெனக் கிடக்கும்
உன் குழற்கற்றையும்
தாம் திரும்ப’
உயரற்ற பிணச்சடங்குகள் தாமோ பெண்ணே,
நீ முற்றம் பெருக்கி வாசல் தெளித்துக்
கோலமிட்டுப் போகும் கலைப் பண்பாடும்?
ஆயிரமாயிரமாண்டுக் காலத்திய
அசிங்கம் இது!
அதிகாரத்தைக் கொஞ்சம் எங்களுக்குக்
கொடுத்துப் பாருங்கள் காட்டுகிறோம்
என்கிறார்கள் பெண்கள் முன்னணியினர்.
அன்பு போதாதா என ஏங்குகிறது
மிச்சம்மீதி கலந்த
எச்சிலையாய் விரிந்து கிடக்கும்
தெருக்குப்பை.

குப்பைகளைத் தெருவில் விதைக்காதீர்கள் யாரும்
குப்பைக்கூடையின் புனிதத்தை வணங்கி
அதை வாசலில் நிறுத்தி
அடிப்படைநலப் பணியாளருக்காகக் காத்திருப்போம்.

* எஸ்ரா பவுண்ட்

நால்வர்

தவறி விழுந்திருந்த தன் பொற்காசினைக் கண்டெடுக்கக்
கிளறிக் கொண்டிருந்தான் ஒருவன்.

தவறி விழுந்திருந்த தன் சோற்றைக் கண்டெடுக்கக்
கிளறிக் கொண்டிருந்தான் ஒருவன்.

மலம் போல் கேவலமாகிக் கிடந்த சாக்கடையை
வீணே அலம்பிக் கொண்டிருந்தான் ஓர் அசமந்தன்.

தன் பார்வையே உக்கிரச் செயலாகப்
பார்த்துக் கொண்டிருந்தான் பரிதி.

Monday, September 24, 2012

மூடமும் வெறியுமாய்

மூடமும் வெறியுமாய்
மனிதர்கள் மனிதர்கள்மீது கொட்டும்
அழிவின் வாதனையை
வெறுப்பின்றித்
தன்னுள் சுமப்பதெவ்விதம்?

மரத்தின்மேல் மைனாக்கள் கதற
கீழே விழுந்த குஞ்சுப் பறவையை-
கதறக் கதற உன் செல்ல நாய்
கவ்வி உயிர்போக்கியது இன்று.

நம் பெருங்கோயில்கள்

ஆதியில் முளைத்த
நம் கோயில் இதுவா?
அக் கோயிலுக்குள்ளே விஷமொன்றிற்கு
இடமிருந்ததோ அப்போதே?

அத்தனை மனிதர்களும்
தமது அத்தனையையும் கழற்றி வைத்துவிட்டு
குனிந்த தலையுடன்
கூடிநிற்கும் தலத்தினையே
தம் கொலைப்பீடமாய்த் தேர்ந்து
திட்டமிட்டு வளப்படுத்திவரும்
மானுடக் கழிசடைகள்தாம்
அந்த விஷமா?

எத்தனை வல்லமை, எத்தனை நேர்மை,
எத்தனை தீரம்?
எத்தகைய மேன்மைகளுடைய மானுடம்
குருதி உலராது
துணித்த தலைகளுடன்
காலம் காலமாய்
கோயில் கிணற்றுக்குள் வீழ்ந்து
இமைக்காது நோக்கிக் கொண்டிருக்கின்றது
நம்மை?

Sunday, September 23, 2012

காவல்

பெருநகர் மனிதத் திரள் வாழ்நிலத்தை
அன்றே அப்பொழுதே
அமைதியின்பம் தவழும் சொர்க்கமாக்குவது
(கடவுளா? மதமா?)
ஓர் ஒழுங்கியல் ஒழுக்கமின்றி வேறேதுமுண்டோ?

ஊரடங்கிய இரவின் அமைதிகளில்
நகர் நடுவின் போக்குவரத்துமிக்க
நாற்சந்திகளிலும் தெருக்களிலும்
ஒழுங்குவிதிகளும் துன்ப துயரங்களுமற்று
ததும்பிநின்ற இயற்கைவெளியின்
தனிப்பெருங் கருணையினைத்
தரிசித்தோமல்லவா?

விஷமும் மலமும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
மாறாது நிலவும் ஒரு மிருகத்தை
அவன் கண்களில்
நேருறக் கண்டு நொடிந்தேன்.

அதுவே தன் சுகபோகமாளிகையின்
விட்டுக் கொடுக்க முடியாத காவல் மிருகமென
தன் சகல செயல்பாடுகளின் மூலமுமாய்
உறுமி நிற்கிறான் அவன்.
விலகி நடக்கிறேன்.
அந்த மிருகத்தை
அதன் பலிமனிதர்களைக் கொண்டே
வளர்த்துச் சிரிக்கும் அவன்,
துளி வானமுமில்லா
தன் புதுப்புதுக்கிராமத்திலிருந்து கொண்டே
சகலரையும் இழிவுபடுத்தும்
பொய்களுரைக்கிற அவன்,
சப்பென்று அமர்ந்த மண்ணினின்றும்
குபுக்கென எழுந்துநிற்கும் மலத்தைப் போன்று
காட்சியளிக்கிறான்.

விஷம் விழுங்க வந்த மனிதன்
மலம் விழுங்க நேர்ந்தவனாய்
ஒரு கணம்
அருவருப்பின் எல்லை தொட்டடங்குகிறான்.

Saturday, September 22, 2012

நானும்! நானும்!

ஒளிரும் விசும்பின் கீழ்
நானும்! என மிழற்றியது
புள்ளினங்கள் சிறகடிக்க
பாடும் பசும் பொன்வெளி.
நானும்! நானும்! எனத்
தானும் மிழற்றியது
ஒரு துண்டுத் தீனியும்
ஒரு குவளைத் தேனீருமாய்
ஆங்கொரு தேனீர்க்கடை!

நடுநிலைப் பள்ளி இடைவேளை

விழியகற்ற முடியாத
அழகின்பக் காட்சியாய்
ஆய்வாளர் கண்ணில்பட்டது
தேன்கூட்டை மொய்த்துக் கனலும்
தேனீக்கள்.

வெறுமையிலிருந்த
அத் தேன்கூட்டை உருவாக்கியதும்
வெறுமையின் மலர்களிலிருந்தும்
அத் தேன்கூட்டை நிரப்பியதும்
தாங்களே என்பதறியாத மாணவர்களும்
தங்களை அறியச்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்
ஓர் ஆசிரியப் பூஜ்யனும்.

Friday, September 21, 2012

நல்ல உயரம்; ஆனால்

நல்ல உயரம்
ஆனால்
ஏதோ ஒன்று
யார் முன்னும்
அதனைக்
குறுக்கிக் கொள்ளச்
செய்வது போன்ற தோற்றம்.

குறி தவறாத
வாசக லட்சப் புகழின்
பன்னீர்ப் பொழிவு தீண்டக்
கூசாமல் கூசி நிற்பது போன்ற
தோள் ஒடுக்கம்.

தொடரும் துயர்ப் பாதையில்
கடைசி வரையிலும்
தன்னை அறிந்து
அதனைத் துறக்காத
ஊனப் பிறவி.

பெருநகர்

அண்ட சராசரங்கள்
அனைத்தையும் ஆள்பவராயிருப்பினும்
கடவுளின் சொந்த ராஜ்யமல்லவா,
சொந்த வீடல்லவா,
இந்த பூமி?
பைம்புனல்
பசுந்தருச் சோலைகளின் தணுப்பு
அவரது அண்மை.

ஒரு பெருநகரம்
அவரது அண்மையை மட்டும்
உதறாதிருப்பின்
எத்தனை மொழி பேசும்
எத்தனை இனத்தவராயினும் என்ன,
அது இசைந்து வாழ்கிறது.

அவர் இருக்கும் இடத்தில் மதங்களில்லை
இனங்களில்லை ஜாதிகளில்லை
ஏற்றத்தாழ்வுகளில்லை
வறுமை இல்லை
சண்டை சச்சரவுகளில்லை
போர்கள் இல்லை.
போர்களில்லாத சண்டை சச்சரவுகளில்லாத
வறுமையில்லாத ஏற்றத்தாழ்வுகளில்லாத
ஜாதிகளில்லாத
இனங்களில்லாத மதங்களில்லாத இடத்தில்
அவர் இருக்கிறார்.

அத்தனை இலட்சம் மக்களை
நெருக்கி அணைத்துக் கொண்டிருக்கும்
அந்தக் கற்பனைப் பெருநகர்
ஒரு சிறு கிரீச்சிடலுமின்றி
இறையாட்சியின் நிறைவாழ்வில்
திளைத்துக் கொண்டிருக்கிறது என்றால்
அன்பர்களே, அதன் காரணம்
சீலமும் ஒழுக்கமும் மாத்திரமே அல்லவா?

Thursday, September 20, 2012

இழிசுவர்

அசையாது ஒளிர்கிறது இந்தச் சுடர்,
நான்கு சுவர்களும் ஒரு கூரையுமான
நமது வீட்டை இப் பூமி
ஏற்றுக்கொண்டதின் அடையாளமாய்!

பசேலென்று படரும் கொடிகளும் பூக்களும்
ஒளிர்கின்றன,
நம் ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலுமிருக்கும்
வேலிகளை, ஓர ஒழுங்கியலின் வழி நடத்தலேயாய்
இப்பூமி ஏற்றுக்கொண்டதின் அடையாளமாய்!

வீட்டுச் சுவர்களைப்போல
வேலிச் சுவர்களைப்போல
இச் சுவரை
நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத்தென்ன?
இத்துணை காலம் இடித்துத் தள்ளாமலிருந்ததுமென்ன?

ஊருக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்தச் சுவர்
சில நூறு ஆண்டுகளாய் இருக்கிறது என்றார்கள்.
இல்லை, சில ஆயிரமாண்டுகட்கு முன்னேயே
நாங்கள் தோன்றிவிட்டோம் என்றது ஒரு குரல்.

முதல் பார்வைக்கு அச்சத்தையும் வேதனையையும்
அனுபவமாக்கியது அது.

மனிதர்களில் ஒரு பகுதியினர் மறு பகுதியினரை
அச்சத்தாலும் வேதனையாலும் அவமானத்தாலும்
ஒருக்காலும் எழுந்திருக்கவே இயலாதபடி
அடித்து நொறுக்கி
உருவப்பட்ட அவர்களின் வலிமையையெல்லாம்
கொண்டு கட்டப்பட்டதாய்க் காட்சியளித்தது அது.
ஆகவேதான் இன்று இது இடிக்கப்பட இருக்கையிலும்
அச்சத்தையும் வேதனையையும் அவமானத்தையும்
அதைக் கட்டுவித்த மனிதர்களுக்கும் அளிக்கிறது.
(இன்னும் திமிர்பிடித்தலைபவர்களை இவ்விடம் பேசவில்லை.)

தனது காம, லோப, அதிகார சுவ வாழ்விற்காய்
அடிமனத்தில் தந்திரமாய்த் தோன்றிய இழிகுணம் ஒன்று
புற உலகின் பருப்பொருளாய்த் தோன்றி
இத்துணை அருவருப்பான ஒரு பிறவி
இனியும் இப்புவியில் தோன்ற முடியுமா எனும்படியான
ஓர் உச்சப்படைப்பாய் நிற்கிறது
ஆகவேதான் அந்த அடிமனத்தைக் குறிவைத்தே
அவர்கள் நெஞ்சை நோக்கி உதைக்க வேண்டியுள்ளது.

எந்த ஒரு கருத்தியலும்
அதை உருவாக்கியவனையே
மையமாகக் கொண்டிருக்கிறது
ஆகவே எந்த ஒரு கருத்தியலும்
உறுதியான ஆபத்துடையதே என்றிருக்க
கண்கூடான இழிசுவர் என்னைத் தகர்க்க
தத்துவமொன்றா வேண்டும் என்றது அந்தச் சுவர்
ஆகவேதான், இடையறாத உயிர் இயக்கத்தால்
அந்தரவெளியில் வேர்கொண்டிருக்கும்
நம் கால்கள்கொண்டு
அந்த இதயம் பார்த்து உதைக்க வேண்டியுள்ளது.

மனிதர்மீது மனிதர்க்கு...

மனிதர் மீது மனிதர்க்கு வேண்டிய
அன்பு துளியுமின்றி
உன் கருணையினாலன்றோ வாய்த்துள்ளன,
இவ்வுயிர்வாழ்வில் உள்ள இன்பங்கள் எல்லாம்!

Wednesday, September 19, 2012

இரு பிறப்பாளர்கள்

பாரதி,
உனக்குத் தெரியாதோ இது?
மானுடனாய்ப் பிறந்தது ஒரு பிறப்பு.
தோளில் மாட்டிக் கொண்ட பூணூலால்
நம்மை அசிங்கப்படுத்திக் கொண்டது
இன்னொரு பிறப்பு.
இதிலே
எல்லோருக்கும் பூணூல் மாட்டி-
அது நடவாது என அறிந்தே-
எல்லோரையும் நீ உயர்த்துவதாய்க்
கிளம்பியதன் அடியில் இருக்கும்
கயவாளித்தனமான பசப்பு
தேவையா பாரதி?
நம்மை மற்றவர்கள் அறிந்து கொள்ளுமுன்
நம்மை நாமே அறிந்து தெளிந்திருந்தால்
எவ்வளவு நன்றாயிருக்கும்?
ஆனால் இன்று ’தர்மாவேச’த்துடன்
இந்தியர்களனைவரையும்
இந்துக்களாக்கும்
’உயர்ந்த இதயங்களி’லெல்லாம்
வெட்கமின்றி வீற்றிருக்கிறாயோ
தேசிய மகாகவி பாரதி?

வெண்மலர்கள்

தன்னைப் போலவே
சக மனிதனும் வாடுவதறியாது
துயர் உழன்றுகொண்டிருக்கும்
மனிதர்களை விட்டோடிப் போய்த்
தகித்து மலர்ந்து நிற்கும் தனிமையோ,
அமைதி உறையும் மலைப் பிரதேசத்தின்
குளர்மை நெருக்கம் தந்த
நீர்நிலையின் நிச்சலனம் காட்டும் தன்னழகில் தானே லயித்து
இன்புற்றிருக்கும் ஒரு வெண்மலர்?

தன் எதிரொலியாய் பிரதிபிம்பமாய்
தன்னைத் தொடர்ந்துவரும்
காதலின் கரம்பிடித்து நிற்கும் இணையோ,
தேன்நிலவுக்காய்
மீண்டும் அதே நீர்க்கரையோரம் வந்து
தங்களைத் தாங்களே உற்று
இன்புற்று மகிழ்ந்து கொண்டிருக்கும்
வெண்மலர்கள்?

அத்தனை தூய்மை அத்தனை மென்மை
அத்தனை வெண்மையுடன்
உருக்கொண்டுவிடாது உலவும் உருவோ,
பசும்புனல் பள்ளத்தாக்குகளினின்றும்
மேலெழுந்து
மலைமுகடுகளில் உலவிக்கொண்டிருக்கும்
மஞ்சு?

Tuesday, September 18, 2012

அந்த ஊர்

மழைநீரில் தன்னந்தனியாய்
மிதக்கும் ஒரு காகிதப் படகுபோன்ற அழகு.

வெறுமை சூழ்ந்து நிற்கும் மணல்தேரிகளும்
வைகறைகளிலும் அந்திகளிலும்
வானத்திற்கூடும் அதிசயங்களும்
நண்பகல்களில்
மனித வசிப்பிடங்களுக்குள்ளே வந்துறைந்து
முணுமுணுக்கும் ரகசியங்களும்
ஆடிக் காற்றும் அடைமழையும்
கரைபுரளும் ஆற்றுவெள்ளமுமாய்
வேதனை கிளர்த்தும்
பருவகாலங்களை உடையதாயிருந்தது
அந்த ஊர்.

அனைத்து வீடுகளிலுமுள்ள அனைத்து மனிதர்களும்
உறவினர்களாயிருந்தார்கள் அந்த ஊரில்.
அயலூர்களிலிருந்து ஊருக்குள் வரும்
எளிய சைக்கிள் சுமை வியாபாரிகள்
இன்னபிற அந்நியர்களைக் காணுங்கால்
பித்துப் பிடித்தவர்கள்போல் பாய்ந்து சென்று
அவர்களைச் சூழ்ந்து சொரியும் விநோதமான
அன்புப் பெருக்குடையோராய் இருந்தார்கள் அவர்கள்.
அதிசயமானதோர் காதலால் ஒளிர்ந்தன
குழந்தைகளுடையதும்
கன்னிப் பெண்களுடையதுமான கண்கள்.
அஞ்சித் திரும்பி கோட்டைச் சுவர்களாகிவிடாது
நீர்நிலையெங்கும் முழுமையாய் விரியும்
வட்டங்களும்
தாமரைகளும்
பூக்கும் குளம் மிளிரும் அந்த ஊரில்.

தூரத்து நண்பரும் தாமரைத் தடாகமும்

எனது விடுதி வாழ்க்கையிலோர்
தூரத்து நண்பர்.
அவர் வாழும் கிராமத்தில்
சூர்ய ஒளிபட்டுத் தகதகக்கும்
குளத்தில் தாமரைகள் பூத்துக் கிடக்கும்.
அவரோடு உரையாடியபோது
நான் தெளிந்த அந்தக் காட்சி.

அவ்வயதுவரை தாமரைகளை
ஓவியங்களிலும் புகைப்படங்களிலும்
பூக்கடைகளிலும் மட்டுமே பார்த்திருந்த நான்
ஓர் விடுமுறை நாளில்
அவர் ஊர் சென்று
அவரோடும் தாமரைகளோடும்
நீந்திக் குளித்துக் களித்துவர
அவரிடம் ஒரு வாய்ப்பு வாங்கினேன்.

ஓர்நாள் பேருந்து ஏறி அமர்ந்து முதல்
அவ்வூர் இறங்கியதுவரை
அந்த அழகிய சிறிய ஊரில் வதியும்
அவர் பெயரை நான் மறந்திருந்த்தெண்ணித்
திடுக்குற்று நெடியதொரு அமைதியின்மைக்குள்ளானேன்.
இனி எப்படி அவரை விசாரிப்பது?
அதுவரை தாமரைத் தடாகம் ஒளிரும் ஊருடையவர்
என்றே என் நெஞ்சில் குடியிருந்த முகவரி
அங்கு வந்துற்றபோது போதாதது கண்டு அழுதேன்.
என் புத்தியை நொந்தபடியே
அக் குளக்கரையை அடைந்தேன்.
பிரயாணப் பையைக் கரையோரம் வைத்துவிட்டு
நான் வெகுநேரம் தாமரைகளை வெறித்துக் கொண்டிருந்ததையும்
பின் தயங்கித் தயங்கி அக்குளத்தில் குளித்துக் கரையேறியதையும்
கண்ணுற்ற ஊரார் சிலர்
தங்கள் ஊருக்குள் வந்த அந்நியனில் கண்ட
விநோதத் தன்மையால் கவரப்பட்டு விசாரித்தார்கள்
என் பிரச்னை அறிந்து துணுக்குற்றனர் அவர்களும்
ஒருவாறு அடையாளங்கள் பலகூறி யூகித்துணர்ந்து
முழுகிராமமே விழிப்புற்று அவர் வந்தார்.
அவர் புன்னகையில் ஒரு வருத்தமும் சமாதானமும்
சந்தோஷமும் கண்டு
நான் வெட்கினேன்.

Monday, September 17, 2012

எத்தனை குரூரம்!

கத்தியின் கூர் அறியா அசமந்தம்
அதைப் பயன்படுத்துவது!

களிப்பாடலும் கூக்குரலும்

சொற்களையும் சின்னங்களையும்
துறந்தவனைத்தான் நான் மணப்பேன் என்று
காதலும் நாணமும்
காற்றூஞ்சலில் அசைந்து மிளிரச்
சிவந்து நின்றது அவன் எதிரே ஒரு மலர்.
மேலும் மிழற்றியது:
உணவு என்ற சொல்
உணவாகிடுமா?
ஆகிடுமா கடவுள் என்ற சொல்
கடவுள்?
வழிபாடுகளும் பிரார்த்தனைகளும்
தொழுகைகளும் சடங்குகளும்
மானுடச் செயல்களாகிடுமா?
மானுடத் துயர் போக்கிடுமா?
இதோ இதோ எனத்
துடித்துக் கொண்டிருக்கும்
என்னிடம் நீ
இணைய இயலாத போதெல்லாம்
இதுவல்ல இதுவல்ல என்றல்லால்
என் காதலை நான்
எப்படிச் சுட்டுவதாம்?

இன்பமுமில்லாத
துன்பமுமில்லாத-
எதுவுமே இல்லாத
இந்த வெட்ட வெளியிலே
தன்னந் தனியாய் நின்றுகொண்டு
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றா
கேட்கிறாய் என்னை நீ?
கருணையும் காதலும்
அழகும் அற்புதமுமேயான
ஒரு பேருயிரை நோக்கி
நெஞ்சுருகி
பிரார்த்தனை பரவும்
வேளை இது என் அன்பனே!
நான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்.
எந்தக் கற்கோவில்களும் சிலைகளுமல்ல
என் முன் நிற்பது;

எந்த்த் துயர்நீக்கத்தையும்
தள்ளிப் போட்டுவிடும் புகலிடமும் அல்ல;
ஆசைகளனைத்தையும் ஒழித்து நிற்கும்
பெருஞ்செல்வம்.
அதிகாரம் என்றொன்றில்லாத பேராட்சி.
எதன் பேராலும் எதைக் காப்பாற்றுவதற்கென்றும்
போர்கொள்ளும் பயங்கரங்கள் தீவினைகள்
பிறக்கவொண்ணாத பேரமைதி
அருள்வெளி.

துயர்போலும் நெஞ்சைத் தீண்டும்
எனது களிப்பாடல் உனக்குக்
கேட்கவில்லையா?

அவன் பேசலானான்:
நான் மலரல்லவா?
நான் மனிதன்?
இதுவே எனது துக்கமோ?
என்றாலும் உன் குரல் கேட்கும்
செவியுற்றேன்.
உன் காதற்பேறு பெற்றேன்.
இதுவே என் பெறுபேறு என்றாலும்
நான் ஒரு மானுடனே; நின் போலுமொரு
மலரல்லன்.
பாதையில்லாப்
பாதையறியும் திறனில்லான்.
கத்தியின் கூர் அறியாது
கத்தியை உபயோகிக்கின்ற குரூரன்.
போகத் துய்த்தல்களில்
சுரணையழிந்து கொண்டிருக்கும் வீணன்,
வற்றாத கண்ணீரும்
விளங்காத வாய் வார்த்தைகளும்
வெற்றி பெறாத இதயமும்
ஆறாத ரணங்களுமுடைய மானுடன்.
நின்னைக் கரம் பிடிக்க இயலாத
பத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிந்த
கையில் கொலைக் கருவிகளுடன்
கடவுளை நாடி நிற்கும் மூடன்.
நான் இந்தியன், நான் அமெரிக்கன்
நான் இந்து நான் முஸ்லிம்
நான் கிறித்தவன் நான் பிராமணன்
நான் யூதன், நான் சைவன்
இரத்தக் குழாய்கள் முழுக்க
அடைத்துக் கொண்டிருக்கும் கொழுப்புடையோன்

ஆனால் இன்று இதோ இக்கணம்
நீ வாடி உதிர்ந்து விடுமுன்
என் வாழ்வையும்
நான் முடித்துக் கொள்ள விழைகிறேன்.
உன் வாட்டம் தொடங்கியதுமே
என் நெஞ்சும்
குருதி கொட்டத் தொடங்கிவிட்டது என் அன்பே,
என்றும் மலர்ந்து நிற்கும் கருணைப் பெருவெளியில்
மீண்டும் மீண்டும் பூத்துக் கொண்டேயிருக்கும்
உன்னோடு இணைந்து கொள்ள
இதோ வந்துவிட்டேன் என் ஆருயிரே!

Sunday, September 16, 2012

பாப்பாத்தி மக்கள்

அம்மா ரொம்பச் சிவப்பாக இருந்ததால்
பாப்பாத்தி எனப் பெயர் சூட்டினார்களாம்.
மகிழ்ச்சியின் துவக்கப் புள்ளியோ அது?

’காலத்தின் கூத்’தால்
அவன் மேலே வந்திருந்தால்
அவனை ஒரு பாப்பாத்தி வந்து கட்டிக்கொள்ள
தொடர்ந்த்தே மகிழ்ச்சியின் பாரம்பரியம்!

பார்ப்பன மருமகனுமாய் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்
இன்னும் அழுத்தமாய்த் தொடர்ந்ததே
அந்த மகிழ்ச்சியின் பாரம்பரியம்!

இருப்பினும் அத்தோடு
எந்த இழிவும் பாவமும் ஒழியாத நிலையின்
அறுபடாத ஆசாரத் தொடர்ச்சிதான் விநோதம்.
அத்தோடு
கருநிறத்தவளாய்ப் பிறந்துவிட்ட அவன் மகள்
ஒவ்வொரு கணமும் தன்னை நீரூபிக்கத்
தன் பேச்சிலும் நடையிலும் ஆசாரத்திலுமாய்த்
திணறிக் கொண்டிருக்கும் பரிதாபமோ
எத்தனை இரக்கத்திற்குரிய விநோதம்!

வேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்

வைகறையின் காபிக் கடைச் சந்திப்பில்
வீட்டுமனைத் தரகர் பால்ராஜூ
பேசிக் கொண்டிருந்தார்: அய்யா,
உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.
நீங்கள் போட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய்க்கு
இந்த 25 வருடத்திற்கு வட்டி என்ன ஆயிற்று!
வேறு இடத்தில் போட்டிருந்தால், இந்நேரம்
எத்துணை நன்மையாய் முடிந்திருக்கும்
உங்களுக்கு.

எஸ்ஸி ஏரியாவாக அமைந்துவிட்டது.
அங்குபோய் வேறு சாதிக்காரன்
இடம்வாங்க அஞ்சுகிறான்.
இன்னொரு எஸ்ஸிதான் வாங்கவேண்டியிருக்க,
எஸ்ஸிகாரங்க கையில் சில்லறை இல்லாமையாலும்
சில்லறை உள்ளவனும்
இங்கு தன் பங்களாவைக் கட்ட விரும்பாமையாலும்
அந்த நிலம் விலை உயராமலே கிடக்கிறது.

பாருங்க இங்க மாப்பிள்ளையூரயிணில்
எல்லாரும் நாடாக்க மாருங்கதான்
அங்கேயும் நிலம்மதிப்பு அப்படியே கிடக்கு.
ஒரே சாதிக்காரங்க இருக்கிற இடத்திலயும்
இந்தக் கதிதான்.
வேறு சாதிக்காரன் வந்து குடியிருக்க
பயப்படுறான். ஒரு பிரச்னை வந்தால்
எல்லோரும் ஒண்ணுசேர்ந்துக்கிடுவாங்கண்ணு
பயம்.

ஆசிரியர் காலனியப் பாருங்க. அன்றைக்கு
சென்ட் 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினாங்க.
எப்படிக் கிடந்த இடம்!
இன்றைக்கு சென்ட் ரூபாய் நான்கு லட்சம்.
ஏன்? அங்கே எல்லா சாதி ஜனங்களும்
கலந்து கிடக்கிறாங்க.

Saturday, September 15, 2012

கொசுபத்தி

படித்தது போதும்
விளக்கை அணை.
நின் அரிதுயிலில்
உணரப்படட்டும்,
ஓர் மூலையில் அமர்ந்துகொண்டு
எரியும் ஒரு கொசுபத்தி போலும்
ஓர் ஊதுபத்தி போலும்
இவ் அண்டம் முழுக்கப்
பரவி நிறைந்து கொண்டிருக்கும்
துயிலென்பதறியாத
விழிப்பொன்றின் மாண்புகள்.

ஜன்னல்

நீரூற்றப்பட்ட ஜாடியில்
ஓர் ஒற்றை மலர்.

இருக்கும் கலைச்செல்வம் எல்லாம்
அடக்கம்
சுவர் அலமாரியில்

படங்களில்லாத சுவர்.
சூரியனாய்த் தகதகத்தது
ஜன்னல்.

கண்டவிடங்களில் மழைநீர்

கண்டவிடங்களில் மழைநீர்
தேங்குவது கூடாதென்பது அறிவோம்.

ஆறு ஏரி குளம் குட்டைகள் நிரம்பி
கடலில் கலக்க வேண்டும் மழைநீர்.
அவன் நெஞ்சம் ஒரு கடல் என்கிறதோ
அவன் இல்லம் சுற்றிலும்
நிரப்பப் படாதிருக்கும் பள்ளம்?

Friday, September 14, 2012

வேரழுகினசெடி

நாடுகள் மதங்கள் நூற்றுச்
சடங்கு நம்பிக்கைகள்
நம்மைக் கூறுபோட்டு
அழகுமீதும் அறத்தின்மீதும்
ஒளிரும் நுண்ணுணர்வுகளை
அழித்ததல்லாது
செய்கிறதென்ன?

தீமைகளோடு கூடிய நம் சமரசம்
வேதனையின் பள்ளத்தாக்கை
வந்தடையவில்லையா?

அன்பின் பெருநிறைவை
அடைந்திலமை அறியோமோ?

பேராசைகளிலும் பகட்டுகளிலும்
குதூகலிக்கிற உள்ளத்தின்
வெற்றாரவாரங்கள்
மெய்ப்பொருளை ஆழ்த்திவிடுதல்
அறியோமோ?

அநீதிகளாலும் வறுமையாலும்
எரிந்துகொண்டிருக்கும் ஏழைகள்
திக்கற்றவராதலறியோமோ?

எதிர்தீவினைகள் அறியோமோ?

வேரழுகின செடியினதுவாய்
வெகுவேகமாய் வாடுகின்றனவே
சோகவனத்தின் அசோகமலர்கள்!

சோகவனத்தின் அசோக மலர்கள்

நீங்கள் எப்போதும்
விவரிக்கறீர்கள்
’அசோக மலர்கள்’ என்றாலே
போதுமே.’
’சரி.
அசோக மலர்கள்.’

மறுநாள் மாலை
என் வீட்டுக்கு வந்த
கிளிப்பிள்ளைபோலும் வாயுடைய
விமர்சக நண்பர் கூறினார்.
’எல்லோரும் சொல்வது போலவே
நீங்கள் எப்போதும் விவரிக்கறீர்கள்
’மலர்கள்’ என்றாலே போதுமே.’
’சரி
மலர்கள்.’

மறுவாரம் ஞாயிறு சந்திப்பில்
மேஜை மேலிருந்த
என் கைப்பிரதியைப் பார்த்துவிட்டார்
என் கவிதை வித்தக நண்பர்.
என்ன இது ’மலர்கள்’
ஒரு கவிதைத் தொகுப்பிற்கு
மலர்கள் என்ற பெயர்
எத்தனை வெளிப்படையாயிருக்கிறது
எல்லோரும் சொல்வது சரிதான்
நீங்கள் விவரிக்கிறீர்கள்.

நான் மவுனமானேன்
மலர்கள் என்னும் பொருளைக்
குறிப்புணர்த்துவது எப்படி என்று.

Thursday, September 13, 2012

ஒரு நதிக் கரையோரம்

ஆடைகள் கழற்றிவைக்கும் கல்மண்டபம்
சகிக்க முடியாதபடி அசுத்தமாக இருந்தது.
ஆற்று நீர் குளிக்க உகந்ததாக இருக்கிறதா-
யோசிப்பவர்களாய் எட்டிப் பார்த்தார்கள் அவர்கள்.
பூஜை மணியோசையும், பறவைகள்
அதிர்ந்து கலையும் ஒலியும் கேட்டன.
நடை சாற்றப்படுவதற்குள்
கோவிலுக்குள் நுழைந்துவிட வேண்டிய
அவசரத்திலிருந்தார்கள் அவர்கள்.

திடுக்கிடும்படி
நீர்க்கரை மரத்தில் ஒரு பறவை
தன்னந்தனியாய்
தன் உயிரே போவதுபோல்
ஓர் அபாய அறிவிப்பைப் போல்
உறுதிமயமான ஒரு குரலில்
விடாது கத்திக் கொண்டேயிருந்தது.
நின்று, பாறைகள் நடுவே களகளவென்று
மூச்சுவிடாமல் செவிமடுக்கப்படாதவை போல்
துயர் கனத்துக் கொண்டிருந்தன,
அங்கு நிலவிய மவுனமும் ஒலிகளும்.

சாரணை மலர்கள்

ஒளிரும் வான்நோக்கிய புன்னகையோ,
இருள் வேளைகளில்
ஒலிக்கும் தேவதைகளின் சொற்களோ,
காதல் தெய்வத்தின் பட்டுக் கன்னங்கள்
தொட்டுணர முன்னும் வேட்கையோ?
பகலில் பரிதியையும்
இரவில் விண்மீன்களையும்
இமைக்காது பருகிக் கொண்டிருக்கும் காதலோ
வானம் தன் முகம் பார்க்க விரித்த ஆடிக்குள்ளிருந்தே
அவன் முகம்நோக்கி அண்ணாந்த மோகமோ,
தனது மாசுக் கேட்டையும் துயர்களையும்
ஒரு கணம் மறந்து நின்ற
பூமியின் நெகிழ்ச்சியோ
தூய தன் மகிழ்ச்சியோ
நீர்க்கரைகள் தோறும் தோன்றும் உயிரொளியோ
ஒளி ஊடுறுவும்படியாய்ப் பூத்த
வெண்மையும் மென்மையும் கொண்ட
இந்தச் சாரணை மலர்கள்?

Wednesday, September 12, 2012

அழகுக் குறிப்பு

’வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது,
அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!”
என்றாள் அவர் மகள்.

தெய்வீகம்

அன்றொருநாள்
அதிகாலைத்
தோட்டத்துள்ளே
பூஜைப் பூக் குடலை
நழு
வி
வி
ழு
ந்
தக ல
ஒரு பூவின் அழகு.

Tuesday, September 11, 2012

மெய்யாகவே

சொல்லொணாப் பேரழகாய்
ஆகச் சிறந்த பரிசொன்றின்
அற்புத ஒளியாய்
கண்முன்னே புன்னகைக்கும்
இக் காலைப் பொழுது.

மயக்கமோ
மாயத்தோற்றமோ
அல்ல
மெய்யாகவே
மெய்யாகவே
கதறி அழுதுகொண்டிருந்த
ஆயிரமாயிரம் ஆண்டுத்
துயரிரவின்
உறுதி இறுதியேதான்!

பொய்ப் பகல்கள்

சூரியன் சரிந்து கொண்டிருந்தான்
கடலாலும் மரங்களாலும் சூழ்ந்த
தீவு இருண்டுகொண்டு வந்தது.
எது ஒன்றும் இத் துயர் முழுமையை
எதிர்த்துக் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.
பேரளவான ஏற்பே, மவுனமாய்
நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு
வதையும் ஓர் இதயத்தை
இடையறாத கடலலைகளின்
கொந்தளிப்போசை மாத்திரமே
சற்றே இதமளிப்பதாய்த் தழுவி ஆற்றுகிறது.

கடலோரம், அக் கடலையும்
உட்கொண்டு நிற்கும்
வானின் பிரம்மாண்டமான விரிவு
அத் துயரத்தையும் ஆறுதலையும்
முடிவற்றுக்
கூடுதலாக்கிக் கொண்டேயிருக்கையில்
கூடும் முடிவின்மையெனும் முடிவில்தான்
இனியொரு இன்பமும் இன்பவலியும்
மறைந்து நிற்கிறதா?

நட்சத்ர ஒளிகளின் கீழுள்ள
கடல் மணற் பரப்பும், காற்றும்
மனிதனைத் தீண்டித் தீண்டித் தகிக்கும்
தூய நீராட்டல்கள் எதனாலும் பயனில்லையா?
ஆற்றொணாததோ
அன்பின் தோல்விகளாற் துவண்டு போன
வேதனைகள்?

மண்ணை ஒரு கணமும் பிரியாது
ஆவேசமாய்ச் சூழ்ந்து நின்றபடி
எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது
கடலின் ஆதிப் பெருங்குரல்.

எத்தனை பொய்ப் பகல்தான்
வந்து வந்து போயின!

Monday, September 10, 2012

நதி

உன் பூம்பாதம் எண்ணியன்றோ
இப் பொன்மணலாய் விரிந்துள்ளான் அவன்!

தன்னிலிருந்து தோன்றி
தன்னைவிட்டுப் பிரிந்து
கடல் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்
உன்னைப் பிரிய மனமில்லாமலன்றோ
உன் பாதையெங்கும்
பாறைகளாய்க் கூழாங்கற்களாய்த்
தொடர்ந்து வந்து அவன் நிற்கிறான்!

உன்னால் தீண்டப்படாதிருக்கையில்
தகித்துக்கொண்டும்
பசுங்கரை மர நிழல்களில்
சற்றே இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறான்.
தீண்டப்படுகையிலோ
அடையத் தகுந்தனவற்றுள் எல்லாம்
அடையத் தகுந்ததனை
அடைந்து விட்டவனாய் ஒளிர்கிறான்.

நீயும்
காதல்தான் மெய்க் கடலமுதம் எனக்
கண்டு திரும்பினையோ என் கண்மணீ?
என் மெய்சிலிர்ப்பும் புன்னகையுமாய் மலர்ந்தனவோ
நாணல்களும் தாமரைகளும்?

உனது காதற்களிப்பின் பேரின்பமோ,
என் நெஞ்சை வருடுவதுபோல்
காற்றிலசைந்தாடியபடி
ஒளி ஊடுருவும் ஒளிக் கதிர்க் கூட்டமாய்ச்
சுடர்விடும் இச் சாரணை மலர்கள்?

உங்களின் அருள் நீராட வேண்டியோ
உங்களுக்குள் குதிக்கின்றனர்
எம் காதலின் குழந்தைகள்?

காவிரியும் காணாமற்போன படித்துறைகளும்

முந்தின நாள்தான்
தன் படித்துறை ஒன்றில் இறங்கி
தன்னில் திளைத்து நீராடிச் சென்ற
அந்த மனிதனை – அவனைப் போலவே
நீயும் மெய்மறந்து
அப்படியே தன்னுள்
ஆழ்ந்து விட்டனையோ ரொம்ப நேரம்?-
இப்போதுதான் இவ்விரவில்
திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்
பொங்கி எழுவதென்ன, காவேரி?

நாசி விடைக்க
உன் மேனியெல்லாம்
அவன் மணம் வீச்ச் கண்டவளாய்
நீ உன் மீதே மையல் கொண்டு
படுக்கை கொள்ளாது புரள்கிறதென்ன?

சொலற்கரிய இன்பமோ?
சொன்னாற் குறைந்து போமோ?

உனது இன்பவெள்ளம்
புயல் மழை என வீசிப்
பாய்ந்து விரிந்து பெருகி
நிலவுகிறது எம் நிலமெங்கும் குளிர.

கண்மண் தெரியாத
என் காமப் பெருவெள்ளம்
வெட்கம் கொண்டு
மவுனம் சொட்டச் சொட்ட
வடிந்து கொண்டிருக்கும்
இப்போதாவது
நாணம்விட்டு
வாய்திறந்து சொல்லேன்:
யார் அவன்? என்ன விஷயம்?
(யாரிடமும் சொல்லமாட்டேன்.
என்னிடம் மட்டும் சொல்: நான்தானே?)

சொன்னால்
உன் அழகு குறைந்து விடுமென
அஞ்சுகிறாயோ?
உன் உள்ளுறைந்து நிற்கும் அவனே
ஒளிரும் நின் பேரழகின் ரகசியமோடி
கள்ளீ,
காவேரி!

Sunday, September 9, 2012

கனவு பூமி

விழித்தெழுந்தபோது கண்ட காட்சியைக்
கனவு என்று சொல்வதெப்படி?

கனவுக்குள் விழித்தெழுந்திருக்கிறேன்
என்றா சொல்கிறீர்கள்?
அப்படியானாலும் அது நல்லதல்லவா?
கனவிலிருந்தும் இனி விழித்தெழுவதற்கான
நற்குறியல்லவா அது?

அன்று
மழை வெயிலுக்கு விரிந்த
குடைகள்போல் காணப்பட்டன,
மனிதர்களின் எல்லா இல்லங்களும்.
புரிதல்மிக்குப் பேணப்படும்
பிரம்மாண்டமான வீட்டுத் தோட்டம் போல்
காணப்பட்டது இயற்கைவெளி.
ஒருநாளுமில்லாப் பெருமகிழ்வால்
பூரிப்படைந்தது போல் பசேலென்று துளிர்த்துக்
குலுங்கிக் கொண்டிருந்தன தாவரங்கள்.
காலம் அதுவரை அனுபவித்தேயிராத
பாட்டும் நடனமும் ஓவியமுமாய்த் திகழ்ந்தன
பாறைகளும் நதிகளும் பறவைகளும் பூக்களும்.
பறவைகள் துணுக்குறும்படியான
வழமையான பூஜைமணி ஓசைகளற்று
ஒரு புத்துலகை அடைந்திருந்தன,
கோயில், பள்ளிவாசல், தேவாலயக் கட்டிடங்கள்.

கண்முன்னே ஆட்டபாட்டங்களுடன்
துள்ளிக் கொண்டிருக்கும் பேரக் குழந்தைகளைக் கண்டு
என்றுமாய் மரணத்தை விரட்டிவிட்ட பெருமலர்ச்சியுடன்
அமர்ந்திருக்கும் பேரியற்கைப்
பெருந் தொன்மையின் புதுமகிழ்ச்சி.
இயற்கைச் சிற்றுலா வரும் குழந்தைகள்
இனி கண்ணாம்மூச்சி விளையாடுதற்கு மட்டுமே என்று
தனது அர்த்தமின்மைகளை யெல்லாம் துறந்து,
பேணு மொரு தூய்மையும் வெறுமையுமாய்.
வெளி ஒளிர, காற்றும் களிப்பெய்த
தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட
பழைய கோயில்களின் புத்தம்புதிய கோலம்.
இதுவரையிலும் பூமி கண்டிராத நெகிழ்ச்சி.

கப்பன் பார்க், பெங்களூர்.

அத்தனை நெருக்கடி மிகுந்த
அத்தனை பெரிய நகர் நடுவே
இயற்கை வெளி ஒன்றைக்
காத்துக்கொள்ளும் திட்டமோ
அந்தப் பூங்கா?

அருகழைத்துத் தழுவ நீண்ட
நூறு நூறு கைகளுடைய மரமொன்றின்
சிமெண்டு பெஞ்சில்
ஏதோ ஒரு செயல்திட்டத்திற்குப்
பணிந்துவந்து அமர்ந்திருப்பவர்கள் போல்
மவுனமாக அமர்ந்திருந்தது ஒரு ஜோடி,
தங்கள் முழங்கால்மேல்
மூக்குரசும் குழந்தையுடன்.

எந்த ஒரு திட்டம் அது?
போர்களினின்றும் துயர்களினின்றும்
இவ்வுலகைக் காத்துவிடும் தீவிர அவசரப்
பெருந்திட்ட மொன்றின் முதல் வேலையாக
இருவருக்குமிடையே
ஓர் உச்சபட்ச அன்னியோன்யத்தை
உண்டாக்கிவிடும் நோக்கமோ?
அங்கு உள்நுழையும் ஒவ்வொருவரிடமும்
செயல்படத் துடித்துக் கொண்டும்
தோற்றுக் கொண்டேயிருக்கிறதும் அதுவோ?

Saturday, September 8, 2012

அதன் பின்

துன்பகரமான
நினைவுகளினதும் வலிகளினதும்
காரணங்களைத் துருவியபடி
இருள்வெளியில்
காலம் காலமாய்ப்
பறந்து கொண்டிருந்த
ஒரு பறவை, அவனருகே
தோளுரசும் ஒரு மரக்கிளையில்!

அதிசயத்திற்குப் பின்தானோ
அது எழுந்து பறந்துகொண்டிருந்தது
காலமற்ற பெருவெளியில்?

பச்சைக் கிளைகள் நடுவே பறவைகள் இரண்டு

பறத்தலையும் தாண்டி
அளவிலா இவ்விண்ணிலும் பெரிதான
அன்பினைக் கண்டு விட்டவர்கள்போல
இருந்தது
அவர்கள் அமர்ந்திருந்த கோலம்!

பேச்செல்லாம் முடிவிற்கு வந்து விட்ட மவுனத்தில்
ஒருவர் அழகு மற்றவர் அகத்தில்தான்
உள்ளதென்பது போல
அருகருகே இருந்தும்
ஒருவரை யொருவர் பார்க்காதவர்களாய்;
பார்க்காதவர்களாயிருந்தும் பிரியாதவர்களாய்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!

தனித் தனியே தம்மைத் தாமே
ஆழப் புரிந்து கொண்டதனால் பூத்த மவுனத்தில்
அதுவே எங்குமாய் எதிரொளிக்கும்
வெளி பார்ப்பவர்களாய்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!

தம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையினைக்
கண்டு கொண்டதனால் பூத்த மவுனத்தில்
தம்மையே மறந்துபோனவர்களாய்
அவர்கள் அமர்ந்திருந்தார்கள்,
அவ்வப்போது அனிச்சையான
சிறுசிறு உடலசைவுகள் தவிர
ஏதொன்றும் செய்யாத
அதிசயமாய் இருந்தார்கள் அவர்கள்!

Friday, September 7, 2012

கவிகளாயிரம்

கவிகளாயிரம்
கண்டு வியக்கும்
பேரழகே! பெறுபேறே!
தமயந்தி!
நினக்கும் ஒரு சோதனையா?
நின் சுயம்வரத்தில்
மாலையுடன் வந்து நிற்கும் நளன்களிடையெ
நின் நளனை நீ கண்டு கொள்வதெப்படி?

காதல் உனக்கு வழிகாட்டும்
என் கண்மணீ!

பச்சை அலைவீசும்

பச்சை அலை வீசும்
நெல் வயற் கடல் நடுவே
ஓடும் ஒரு தார்ச்சாலைப் படகு.
அதன் உள்நிரம்பியுள்ள பொருளோ
காரணமில்லாப் பேருவகை
அல்லது பெருந்துக்கம்.

சூழத் துயர் கனத்துத்
தாழ்ந்து நிற்கும்
அனைத்து நெற்கதிர்களையும்
ஆற்றவென-
எழுந்த ஒரு நெற்கதிரின்
காதற் பெருங்கனலோ
கருணையோ, தீரமோ
இந்தக் கதிர் அரிவாள்?

மவுனமான சாலைகள்
நம்மை அழைத்துச் செல்கின்றன,
இயற்கை வெளியூடே
விண்வியந்து சுரக்கும்
மலைகளைநோக்கி.

மலைகளின் மடிகளெங்கும்
அருவிகளின் கும்மாளம்.
நீரடியில் அமிழ்ந்து கிடக்கும்
கூழாங்கற்களின் நிச்சலனம்.
காடுகளின் இலைகளெங்கும்
பேரின்பத் தாளம்.
மண்பற்றிநிற்கும் வேர்களெங்கும்
ஒரு நாளுமழியாத தாகம்.

கண் நிறைந்த காதல்
ஒருக்காலும் மாறாதோ
எத்துணை நேரம் பார்த்துக் கொண்டிருப்பது,
நீர்க்கரை மரங்களாய்-
நீர்மீது ஆடும் ஒளியையும் காற்றையும்!
எத்தனை அழகான ஜோடி,
நீரோட்டமும் பரிசில் வட்டமும்!

நதியோரம்
மலம் கழிக்க அமர்ந்த கோலம் போலக்
கோயில்கள்.
சாப்பாட்டுத் தட்டைத்
தன்னிடம் கழுவும் மனிதனை நோக்கிக்
கெஞ்சினாள் அவள்:
“தாங்கொணாமை நேரிட்டு விட்டது மகனே,
நீ உனது சாப்பாட்டுத் தட்டைப் பேணுவதுபோல்
என்னைப் பேணுவதுமட்டுமே வழி!”

வானக் குடை முழுசாய் விரிந்த
இத்தனை பெரிய வெளியில்

எவ்வுயிரும் அமைதியுடன்
அங்கங்கே அமைந்திருக்க
இங்கிருந்து அங்கு
எத்தனை வேகம்
இந்தத் தார்ச்சாலைக்கு மட்டும்!

Thursday, September 6, 2012

யார் அவன்?

அன்பின் பேரோலமோ இத்துயர நாதம்?
தன்னந் தனியே துயரோலமிட்டபடி
உக்கிரமாய் விரையும் ரயில்வண்டியில்
கவியும் அந்தியிருளும் நெஞ்சைப் பிசையும் வேளை.

எண்ணங்களாலான என் கருத்தியலோடும்
சார்ந்திராததொரு தனி உயிரின் பெறும்பேறுகளோ
தன்னிலும் வெளியிலும் காணும்
இணையற்ற பெருமிதமும் இரக்கமும் இத்துயரோலமும்?

ஒரு கையசைப்பு ஒரு புன்னகை அன்றி
பிரிவுத் துயரறியாததோ இந்த ரயில்வண்டி?
நிலையங்களைக் கடந்து
மாட மாளிகைகளைக் கடந்து
கூட கோபுரங்களைக் கடந்து, மனிதர்தம்
இரங்கத் தகு வாழ்க்கை முறைகளையெல்லாம் கடந்து
இயற்கை வெளிநோக்கிச் செல்கிறதோ இவ் வண்டி
தன் துயராற்றவே மாறா உக்கிரமும் நிதானமுமாய்?

வெறும் நிலப்பரப்பும் இயற்கை வெளியும் சலித்த்தாலோ
திடீரென்று ஆங்கோர் மனித-உயிர்-வீடு கண்டு துள்ளியது?
உள் விளக்காலொளிரும் வாசல் செவ்வகத்தில்
முட்டுக் கால் பற்றி அமர்ந்திருக்கும் ஒரு நிழலுருவம்!
கண்ட மாத்திரத்தில்
அவன்தான் அவன்தான் என இரத்தம் எகிறித் தவிக்கையில்
சதையோடு பிய்த்து இழுத்ததுபோல் கடந்து போய் விட்டதே
சில வினாடிகளில் அக் காட்சி!

சொல்லொணாத் துயரமும்
தோல்வியுமான பெருந் தனியனோ?
தவிர்க்கவே முடியாமல் இவன் அவனைத்
தவற விட்டு விட்டானோ இப் பயணத்தில்?

அவனைப் பார்த்துவிட்டதே போதுமா?

இப்போது கண்முன்னே அவன்
காணப்படவில்லை என்பதால்
அவன் ஒரு பொய்யனாகவும்
கண்டதுண்டு என்பதால்
மெய்யனாகவும்
காண்கையில் மாத்ரமே
பொருளுளானாகவும்
நிகழும் மாயனோ?

அழியாத ஒரு மானுடன்தானோ அவன்?

இயற்கை நடுவே இயற்கையைச் சிதைக்காது
தன் வாழ்வமைத்துக் கொண்ட மானுடப் பிரதிநிதியோ?
இயற்கையேதானோ?
தெய்வமோ?

”பரிவுகொள்கையில் பரம் பொருளாகிறோம்”

எனது மருத்துவமனைப் படுக்கையருகே
வெகு உயரமாய் வந்து நின்றபடி
பெயர் என்ன என்று கேட்டார்கள்.
பிச்சுமணி கைவல்யம் தேவதேவன் என்றேன்.
குற்றவாளியாய்ச் சந்தேகிக்கப்பட்டவன் போலவோ
ஆராய்ச்சிக்குக் கிடைத்த அரும் பொருள் போலவோ
மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு உதவுவது போலவோ
விளக்கமளிக்க வேண்டியதாயிற்று.

கைவல்யம் என்றால்
பேதா பேதங்களைக் கடந்தவன்
யாதுமாகிய ஒற்றை மனிதன்
மனிதனாகப் பிறந்தவன்
அடைய வேண்டிய பெருநிலை…

யார் உங்களுக்கு இந்தப் பெயரை வைத்தது?
அப்பாவுக்குப் பிடித்த ஒரு பெரியார்
தனக்குப் பிடித்த ஒரு பெரியாரின் பெயரை-
அதுவும் ஒரு காரணப் பெயர்தான்-
வைக்கும் படியாயிற்று.
பிச்சுக்களில் மணி போன்றவன் எனும் பொருளுடைய
அப்பாவின் பெயர் ரொம்பப் பிடித்திருந்ததால்
முன்னொட்டாக அதையும் சேர்த்துக் கொண்டேன்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா?
பிச்சுமணி கைவல்யம் என்ற பெயர்
போதவில்லையாக்கும்?

ஆமாம். ஒரு போரார்வம்தான்
எந்த வினாடியானாலும் எந்த இடமானாலும்
ஒரு காசு செலவில்லாமல்
மிகச் சுலபமாக (பார்க்க: தலைப்பு)
பிரம்மாண்டமான ஒரு காரியத்தைச் செய்யமுடிவதை
விட்டுவைப் பானேன் என நினைத்தேன்.

Wednesday, September 5, 2012

யாராவது ஒரு பெண்ணுக்கு

காலையின் அமைதியை
விடாது துன்புறுத்துவதுபோல
ஒலிக்கிறதென்ன, இந்த அணில்களின்
உரத்த உரையாடல் ஒலி?

இயற்கையின் தனிச் சிறப்பான
நோக்க மொன்று
தாளாது உடைந்துபோன
பொறுமையின்மையோ
இந்த வேதனை?

போர்க் கொடுந் துயர்களுக்கன்றி
வேறெதற்கும் பயன்படா
இனக்குழுப் பற்று மீது மூண்ட வெறுப்போ?

பூர்வ காலந்தொட்டு
யாராவது ஒரு பெண்ணுக்கு
தன்னறிவின்றியே
ரொம்பத் தீவிரமாய்
தன் குழுவை மீறி
பகைக் குழு ஆணின் மீது
மூள்கிறது காதல்.

இன்னொரு கிரகத்திலிருந்து
தவளைபோலும் முகமுடைய
ஓர் ஆண்வந்து நிற்கையிலும்
அவன்மீதும் காதல் மூளும்
இந்தப் பெண்ணுக்கு,
என் அருமைக் கண்ணுக்கு!

கவனமான பொதியலுக்குள்

கவனமான பொதியலுக்குள்
நன்கு பழுத்துக் கனிந்து கொண்டிருந்த
பழத்தின் மணத்தில்
ஓர் உரத்த குரல்:
”கொடுத்து விடு இப்பொழுதே
உன்னைச் சுற்றியுள்ளவர்க்கே”

Tuesday, September 4, 2012

அவன் தனியானவனல்ல

அன்பும் அழகும் இன்பமும்
அரிதாகிப் போனதென்ன?

நம் விசாரணையின்
பயணம் ஒருபுறமிருக்கட்டும்
விழி நிலை ஒன்றேயான
அவன் முன்னே காத்திருப்பதென்னவோ
வன்மையான இவ்வுலகின்
துயர் வகைமைகள் தாமே.

துயர் தப்பிய நுண்ணுணர்வாளருண்டா?

துயரங்கள் வாய்திறந்து
பேசக் கனல்வதையே அவன் பேசுகிறான்.

ஏழ்மையை ஏவி
அவனைப் பரிதவிக்க விட்டாலும்
அவன் தனிமைப்படுவதில்லை
ஏழ்மையில் உழன்று
பரிதவிக்கும் மக்களின் நாவாய்
அவன் அமைகிறான்.
சிறையில் அடைக்கப்பட்டுச்
சித்ரவதை செய்யப்பட்டாலும்
அவன் தனிமைப்படுவதில்லை
சிறையில் அடைக்கப்பட்டுச்
சித்ரவதை செய்யப்படுவோர் குரலாய்
அவன் ஒலிக்கிறான்.
வஞ்சனை அநீதிகளால்
அவன் வாட்டமடைய நேர்ந்தாலும்
அவன் தனிமைப்படுவதில்லை
அத்தகைய மனிதர்களின் பிரதிநிதியாய்
அவன் ஒலிக்கிறான்.
அவன் தனியானவனல்ல என்பதே
அவன் தனிமைப் படாததின் ரகசியம்.

அவனே இவ்வுலகம் என்பதே
அவன் பேசுவதெல்லாமே
யாரையாவது நோக்கிய முறையீடாகவோ
இறைஞ்சலாகவோ கோபமாகவோ அன்றி
தனக்குத் தானே முனங்கிக் கொள்கிறதாக
சுய விசாரணையாக
இருப்பதின் ரகசியம்.
அன்பும் அழகும் இன்பமும்
அரிதினும் அரிதாகவாவது
காணப்பெறும் இரகசியமும்.
அதிகாரமும் வன்முறையும்
எவ் வடிவிலும்
இதய மொக்கைக் கருக்கி விடுவது கண்டு
அன்பினதும் கருணையினதும் அருமைக்காய்
இப்போது அவன் துடிப்பதன் இரகசியமும்.

தீண்டலும் தீண்டாமையும்

நான் வாய் பேசத் தொடங்கியதுமே
கீழ்வானிலே உதித்த விடிவெள்ளியை
அழகுதேவதை வீனஸை
எந்த ஒரு விண்மீன் வழிகாட்டலுமின்றிக்
காணக் கிளர்ந்தவர்கள் போல்
ஓடோடியும் வந்து
எத்தனை காதலுடன்
உன் இரு கைகளாலும்
என் கைகளைப் பற்றி
உருகி நின்றாய் என் தெய்வமே!

திடீரென்று உன் கண்களிலே
ஒரு சந்தேகம், கலக்கம்.
பற்றி நின்ற ஒரு கையை மெல்ல விடுத்து
என் தோளோடு தோளாய் மெல்ல நெருங்கி
அக் கைகளால் என்னை ஆரத்தழுவியபடியே
தொட்டுத் தடவித் தட்டிக் கொடுக்கும் பாவனையில்
எனது முதுகுப் பரப்பில் எதையோ
உன் விரல்கொண்டு தேடுகிறாய்.

என் தகுதியின்மையைக்
கண்டுபிடித்துவிட்டவன் போல்
என்னைத் துயருக்குள் தள்ளிய
என் விலக்கம் கண்டு
விம்மினேன், என் தெய்வமே!

இன்று சின்னங்கள் பலப்பலவாகி
எங்கும் பரவிநிற்கும்
உன் தீண்டலும் தீண்டாமையும்
என்னைச்சுடும்
எக் குற்றங்களையும் மன்னித்துவிடும்
காதற்பெருக்கின்
அழிவிலாப் பேரனுபவமன்றோ
என் தெய்வமே!

Monday, September 3, 2012

சலனப் படக் கருவி முன்

ஒவ்வொரு கணமும்
மாறிக் கொண்டேயிருக்கும் உலகை
ஒவ்வொரு கணமும்
மாறிக் கொண்டே
கண்டுகொண்டிருக்கும்
ஒற்றைவிழியாகி விட்டானோ அவன்?

நீர் சூழ நின்ற பாறைமீது
நில்லென்று பூத்த பறவைக்கூட்டம்
சிறகடிக்கும் கோலம் காணவோ
தன் கால்களை அகலவிரித்தூன்றிக்
காத்திருக்கிறது ஒற்றைவிழி?

ஒளிப் பெரும் புன்முறுவலாய்
பளீரிடும் பாறைகள் புல்திரடுகளுடே
மனம் கனக்கச் சுழித்துச் செல்லும் நீரில்
தம் பளு தாளாது ஊர்ந்து செல்லும் எருமைகளை
தேய்த்து நீராட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி
எத்தனை காலங்களாய் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்?

யாரோ அவள்?
நிலைமாறாது நிலவும் பரிவோ?
காண்பானின் உயிரோ? அவன்
கண்ணீரால் எழுதப்பட்ட ஓவியமோ?

இங்கே பார், ஆனந்தா,
யாவற்றினும் முக்கியமானதைச்
சொல்கிறேன்; அதனை
இதோ இந்த இயக்குநரும்
சலனப்படக் கருவியாளரும்
நன்கு அறிந்திருப்பதைக் கவனி.

இருமை களைந்து
ஒருமை பெற்ற
பார்வை மட்டுமேயான ஒரு மனிதனையன்றோ
பொருத்தமான ஒரு கருவிகொண்டு
படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

பார், ஆனந்தா, ஒரே சட்டகத்துள்
நான் காண்பதாய்
என்னொடு பார்க்கத் தொடங்கியவர்கள்
நான் இல்லாமலே இப்போது
செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்.
இதைத்தானே ஆனந்தா
காலமெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருந்தேன்!

அபயக் குரல்

துயர்மிகுதி தாங்கொணாது
பித்துப் பிடித்ததுவாய்
மரங்களைப் பிடித்தாட்டித்
துன்புறுத்திக் கொண்டிருந்தது காற்று.
அடிக்கடி இதற்கு இப்படித்தானாகி விடுமென்று
அலட்டிக் கொள்ளாதிருந்தனர் மாந்தர்.
இல்லை, அதன் அவசரமான கூப்பாட்டினைப்
படித்துவிட்டவன்போல் எழுந்து நின்றான்
ஒருவன்.
காற்றும் மரங்களும் அதனைக் கண்டு
அமைதியடைந்து நின்றன அவ்வேளை.

Sunday, September 2, 2012

பள்ளம்

மண்ணிலிருந்து விண்ணோக்கி
எத்துணை உயரம் சென்றாலும்
நம் உயரத்தை ஒரு பொருட்டாய்ப் பார்க்காத
விண்ணை விடுத்து
மண்ணின் இதயத்தைத் தொட்டறியவோ
இத்துணை பள்ளத்துள் போய்
அமைந்துகொண்டது உன் வீடு?

நாலா திக்குகளிலும் பொழியும்
மழை தழுவிய வீடுகளின்
துன்பக் கசடுகளெல்லாம்
உன் இல்லம் புகுந்து
உன் கால்களைத் தழுவிப்
பேசும் பேச்சுக்குச் செவிமடுக்க வேண்டுமென்றோ
இத்துணை பள்ளத்துள் போய்
அமைந்து கொண்டது உன் வீடு?

இரவோடு இரவாய்
உட் புகுந்த அவ்வெள்ளத்தை
தடுப்பணை கட்டி
இறை இறை என்று இறைத்துத் தள்ளி
துடைத்துத் தூய்மை செய்து
நிம்மதிப் பெருமூச்சுடன்
உடல் துவள
நீ துயிலத் தொடங்குவதற்கு முன்னே
விடிந்துவிடும் பொழுதுக்காகவோ
இத்துணை பள்ளத்துள் போய்
அமைந்துகொண்டது உன் வீடு?

குப்பைத் திரடருகே

குப்பைத் திரடருகே
கழிவுநீர்க் கால்வாய் விளிம்பின்
சிமெண்டுத் தளம்மீது
குளிரை அணைத்தபடி
துயின்று கொண்டிருந்தவன்
இன்னும் எழவில்லை,
அத்துணை அதிகாலையிலேயே
ஆர்வமான என் காலை நடை
தொடங்கிற்று.

அசுத்தத்தினதும் அருவருப்பினதும் புதல்வனான
அந்த மனிதன் யார் என்று நான்
நன்கு அறிவேன்போல் தோன்றியது.
கிடைத்தற்கரியதாய்க் கருதப்படும் பேறுகளையும் கூட
கருணைக்கு விலக்காகாதவர்களாய்
நாங்களும், இங்கிருந்தபடியே
ருசிபார்த்துத் துப்பியிருக்கிறோம்.

அந்த முகத்தை நான் பார்த்திருக்கிறேன்.
சுரணையின்மையின் தடித்தனங்களாலும்
பேராசைகளின் விகாரங்களாலும்
தன்னலவெறியின் பகட்டாலும்
வறிய மனிதர்களிடமிருந்தும்
தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான
தந்திரங்களாலும்
அருவருப்பின் கலவைச் சித்திரமாய்ச்
சிதைவுற்றிருந்த அந்த முகத்தை.

இப் பூமியினின்றும்
இக் காலை நடையில்
கரைந்தழிவதற்கோ
சகிக்கமுடியாத கழிவிரக்கத்தில்
தொடங்கியது இத்துயரம்?

Saturday, September 1, 2012

இவ்வேளை

மரணம் பிறப்பு
இரண்டையும்
மாறி மாறித் தொட்டு மீளும்
ஊஞ்சல் விளையாட்டு
முடிந்தாயிற்றா குழந்தாய்?

காணத் தொடங்கியாயிற்றோ,
பாலத்தில் நின்றபடி
இரண்டையும் தொட்டுக்கொண்டு
பூமியதிரப் புரண்டோடும்
ஆற்றுப் பெருவெள்ளத்தை?

காலை நேரத்துப் பேருந்து நிறுத்தங்களில்…

தன் கொதிநேர நெருப்பில்
காலைநேரம் எரிந்து கொண்டிருக்கையில்
யாரோ
யாழிசைத்துக் கொண்டிருப்பதுபோல்
எத்தனை அதிசயங்களுடன்
எத்தனை பசுமையுடன்
பூத்து நிற்கிறது
பேருந்து நிறுத்தங்கள் தோறும்
இக் கல்லூரிப் பெண்களினது இளமை.

அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும்
ஆழ்கடல்மேல்
அணுவசைவும் அறியாத
முழுநிலவின் அமைதி.

சுழன்று சுழன்று
உழன்று கொண்டிருந்த அறிவு
எப்படியோ தன் விளிம்பிற்கப்பால்
கண்டுகொண்ட மவுனம்.

தகிக்கும் பாலைவனம்
தன் கடல் வயிற்றுள்
வைத்திருந்து வைத்திருந்து
ஒருநாள்
தன் மடியில் பெற்றெடுத்துக்கொண்ட
சிறுசோலை.

பண்டு திசைமாறித் திரிந்த
நாவாய் கண்டுவிட்ட கரை.

வழிச் சத்திரமோ, வேகத்தடையோ அல்ல:
பொருளற்ற வாழ்வின் பொருளற்ற வேகத்தை
அணைத்துவிடும் நிறுத்தம்.
பெறுபேறு.

காதற் கரமொன்று
நம் முன் நீட்டும்
பூங்கொத்து.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP