நதி
உன் பூம்பாதம் எண்ணியன்றோ
இப் பொன்மணலாய் விரிந்துள்ளான் அவன்!
தன்னிலிருந்து தோன்றி
தன்னைவிட்டுப் பிரிந்து
கடல் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்
உன்னைப் பிரிய மனமில்லாமலன்றோ
உன் பாதையெங்கும்
பாறைகளாய்க் கூழாங்கற்களாய்த்
தொடர்ந்து வந்து அவன் நிற்கிறான்!
உன்னால் தீண்டப்படாதிருக்கையில்
தகித்துக்கொண்டும்
பசுங்கரை மர நிழல்களில்
சற்றே இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறான்.
தீண்டப்படுகையிலோ
அடையத் தகுந்தனவற்றுள் எல்லாம்
அடையத் தகுந்ததனை
அடைந்து விட்டவனாய் ஒளிர்கிறான்.
நீயும்
காதல்தான் மெய்க் கடலமுதம் எனக்
கண்டு திரும்பினையோ என் கண்மணீ?
என் மெய்சிலிர்ப்பும் புன்னகையுமாய் மலர்ந்தனவோ
நாணல்களும் தாமரைகளும்?
உனது காதற்களிப்பின் பேரின்பமோ,
என் நெஞ்சை வருடுவதுபோல்
காற்றிலசைந்தாடியபடி
ஒளி ஊடுருவும் ஒளிக் கதிர்க் கூட்டமாய்ச்
சுடர்விடும் இச் சாரணை மலர்கள்?
உங்களின் அருள் நீராட வேண்டியோ
உங்களுக்குள் குதிக்கின்றனர்
எம் காதலின் குழந்தைகள்?