தூரத்து நண்பரும் தாமரைத் தடாகமும்
எனது விடுதி வாழ்க்கையிலோர்
தூரத்து நண்பர்.
அவர் வாழும் கிராமத்தில்
சூர்ய ஒளிபட்டுத் தகதகக்கும்
குளத்தில் தாமரைகள் பூத்துக் கிடக்கும்.
அவரோடு உரையாடியபோது
நான் தெளிந்த அந்தக் காட்சி.
அவ்வயதுவரை தாமரைகளை
ஓவியங்களிலும் புகைப்படங்களிலும்
பூக்கடைகளிலும் மட்டுமே பார்த்திருந்த நான்
ஓர் விடுமுறை நாளில்
அவர் ஊர் சென்று
அவரோடும் தாமரைகளோடும்
நீந்திக் குளித்துக் களித்துவர
அவரிடம் ஒரு வாய்ப்பு வாங்கினேன்.
ஓர்நாள் பேருந்து ஏறி அமர்ந்து முதல்
அவ்வூர் இறங்கியதுவரை
அந்த அழகிய சிறிய ஊரில் வதியும்
அவர் பெயரை நான் மறந்திருந்த்தெண்ணித்
திடுக்குற்று நெடியதொரு அமைதியின்மைக்குள்ளானேன்.
இனி எப்படி அவரை விசாரிப்பது?
அதுவரை தாமரைத் தடாகம் ஒளிரும் ஊருடையவர்
என்றே என் நெஞ்சில் குடியிருந்த முகவரி
அங்கு வந்துற்றபோது போதாதது கண்டு அழுதேன்.
என் புத்தியை நொந்தபடியே
அக் குளக்கரையை அடைந்தேன்.
பிரயாணப் பையைக் கரையோரம் வைத்துவிட்டு
நான் வெகுநேரம் தாமரைகளை வெறித்துக் கொண்டிருந்ததையும்
பின் தயங்கித் தயங்கி அக்குளத்தில் குளித்துக் கரையேறியதையும்
கண்ணுற்ற ஊரார் சிலர்
தங்கள் ஊருக்குள் வந்த அந்நியனில் கண்ட
விநோதத் தன்மையால் கவரப்பட்டு விசாரித்தார்கள்
என் பிரச்னை அறிந்து துணுக்குற்றனர் அவர்களும்
ஒருவாறு அடையாளங்கள் பலகூறி யூகித்துணர்ந்து
முழுகிராமமே விழிப்புற்று அவர் வந்தார்.
அவர் புன்னகையில் ஒரு வருத்தமும் சமாதானமும்
சந்தோஷமும் கண்டு
நான் வெட்கினேன்.