யார் அவன்?
அன்பின் பேரோலமோ இத்துயர நாதம்?
தன்னந் தனியே துயரோலமிட்டபடி
உக்கிரமாய் விரையும் ரயில்வண்டியில்
கவியும் அந்தியிருளும் நெஞ்சைப் பிசையும் வேளை.
எண்ணங்களாலான என் கருத்தியலோடும்
சார்ந்திராததொரு தனி உயிரின் பெறும்பேறுகளோ
தன்னிலும் வெளியிலும் காணும்
இணையற்ற பெருமிதமும் இரக்கமும் இத்துயரோலமும்?
ஒரு கையசைப்பு ஒரு புன்னகை அன்றி
பிரிவுத் துயரறியாததோ இந்த ரயில்வண்டி?
நிலையங்களைக் கடந்து
மாட மாளிகைகளைக் கடந்து
கூட கோபுரங்களைக் கடந்து, மனிதர்தம்
இரங்கத் தகு வாழ்க்கை முறைகளையெல்லாம் கடந்து
இயற்கை வெளிநோக்கிச் செல்கிறதோ இவ் வண்டி
தன் துயராற்றவே மாறா உக்கிரமும் நிதானமுமாய்?
வெறும் நிலப்பரப்பும் இயற்கை வெளியும் சலித்த்தாலோ
திடீரென்று ஆங்கோர் மனித-உயிர்-வீடு கண்டு துள்ளியது?
உள் விளக்காலொளிரும் வாசல் செவ்வகத்தில்
முட்டுக் கால் பற்றி அமர்ந்திருக்கும் ஒரு நிழலுருவம்!
கண்ட மாத்திரத்தில்
அவன்தான் அவன்தான் என இரத்தம் எகிறித் தவிக்கையில்
சதையோடு பிய்த்து இழுத்ததுபோல் கடந்து போய் விட்டதே
சில வினாடிகளில் அக் காட்சி!
சொல்லொணாத் துயரமும்
தோல்வியுமான பெருந் தனியனோ?
தவிர்க்கவே முடியாமல் இவன் அவனைத்
தவற விட்டு விட்டானோ இப் பயணத்தில்?
அவனைப் பார்த்துவிட்டதே போதுமா?
இப்போது கண்முன்னே அவன்
காணப்படவில்லை என்பதால்
அவன் ஒரு பொய்யனாகவும்
கண்டதுண்டு என்பதால்
மெய்யனாகவும்
காண்கையில் மாத்ரமே
பொருளுளானாகவும்
நிகழும் மாயனோ?
அழியாத ஒரு மானுடன்தானோ அவன்?
இயற்கை நடுவே இயற்கையைச் சிதைக்காது
தன் வாழ்வமைத்துக் கொண்ட மானுடப் பிரதிநிதியோ?
இயற்கையேதானோ?
தெய்வமோ?