நல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…
அவளை அமரச் செய்துவிட்டு
படகுச் சவாரிக்குச்
சீட்டு பெற்றுக் கொண்டிருக்கும்
நெடிய வரிசையில் போய்
நின்று கொண்டான் அவன்.
நெஞ்சை அள்ளும்
அத்தனை நிலக்காட்சிகளோடும்
ஒத்தமைந்த ஓர் பேரழகாய்
சுற்றுலா வந்த கூட்டத்துள்
அவள் தென்பட்டாள்!
ஒரு மானிடப் பெண்!
அணங்கு!
சின்னச் சின்னப் பார்வைகளால்
துயருற்றகன்றுவிடாத தெய்வீகம்!
காதலின்பத்தாலும் மகிழ்வாலும்
பேரொலி வீசிய வதனம்,
மானுடத் துயரால்
மட்டுப் படுத்தப்பட்டாற் போல்
மிளிரும் இதம்!
வெளித்தெரியாத சின்னான் கருவாய்
தேவகுமாரனைத் தாங்கி நிற்கும் கன்னி?
விழியகற்றவியலாது
வாழ்நாள் முழுமைக்குமாய்
விழிநிறைத்து நிற்கும் ஓவியம்
மிகச்சரியான துணைவன்
அவளைத் தேர்ந்தெடுத்துள்ளான்
என்பதன் காரணமோ?
மிகச் சரியான இடத்தில்
அவன் அவளை அமர்த்திவிட்டுச்
சென்றுள்ளான் என்பதே அதன் காரணமோ?
யாவற்றிற்கும் மேலாய்
வானம் தந்த ஊக்கமனைத்தையும் பெற்று
பெருவல்லமையுடன்
வானிலும் பூமியிலுமாய்
வளர்ந்து கிளைத்து விரிந்து
தற்போது அவளைத் தன்மடியில்
கொண்டிருக்கும் அம்மரத்தின் பிரம்மாண்டம்
அவளைத் தீண்டிப் புகட்டியிருந்ததாலோ?
பேரியற்கையின் பிறிதொரு உன்னத சிருஷ்டியாய்
எவ்விதமோ
அவள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதாலோ?
அன்றி
வேதனை கொண்டதோர் உள்ளத்தின்
கானல்நீருக் காட்சிதானோ?