பொய்ப் பகல்கள்
சூரியன் சரிந்து கொண்டிருந்தான்
கடலாலும் மரங்களாலும் சூழ்ந்த
தீவு இருண்டுகொண்டு வந்தது.
எது ஒன்றும் இத் துயர் முழுமையை
எதிர்த்துக் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.
பேரளவான ஏற்பே, மவுனமாய்
நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு
வதையும் ஓர் இதயத்தை
இடையறாத கடலலைகளின்
கொந்தளிப்போசை மாத்திரமே
சற்றே இதமளிப்பதாய்த் தழுவி ஆற்றுகிறது.
கடலோரம், அக் கடலையும்
உட்கொண்டு நிற்கும்
வானின் பிரம்மாண்டமான விரிவு
அத் துயரத்தையும் ஆறுதலையும்
முடிவற்றுக்
கூடுதலாக்கிக் கொண்டேயிருக்கையில்
கூடும் முடிவின்மையெனும் முடிவில்தான்
இனியொரு இன்பமும் இன்பவலியும்
மறைந்து நிற்கிறதா?
நட்சத்ர ஒளிகளின் கீழுள்ள
கடல் மணற் பரப்பும், காற்றும்
மனிதனைத் தீண்டித் தீண்டித் தகிக்கும்
தூய நீராட்டல்கள் எதனாலும் பயனில்லையா?
ஆற்றொணாததோ
அன்பின் தோல்விகளாற் துவண்டு போன
வேதனைகள்?
மண்ணை ஒரு கணமும் பிரியாது
ஆவேசமாய்ச் சூழ்ந்து நின்றபடி
எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது
கடலின் ஆதிப் பெருங்குரல்.
எத்தனை பொய்ப் பகல்தான்
வந்து வந்து போயின!