இழிசுவர்
அசையாது ஒளிர்கிறது இந்தச் சுடர்,
நான்கு சுவர்களும் ஒரு கூரையுமான
நமது வீட்டை இப் பூமி
ஏற்றுக்கொண்டதின் அடையாளமாய்!
பசேலென்று படரும் கொடிகளும் பூக்களும்
ஒளிர்கின்றன,
நம் ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலுமிருக்கும்
வேலிகளை, ஓர ஒழுங்கியலின் வழி நடத்தலேயாய்
இப்பூமி ஏற்றுக்கொண்டதின் அடையாளமாய்!
வீட்டுச் சுவர்களைப்போல
வேலிச் சுவர்களைப்போல
இச் சுவரை
நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத்தென்ன?
இத்துணை காலம் இடித்துத் தள்ளாமலிருந்ததுமென்ன?
ஊருக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்தச் சுவர்
சில நூறு ஆண்டுகளாய் இருக்கிறது என்றார்கள்.
இல்லை, சில ஆயிரமாண்டுகட்கு முன்னேயே
நாங்கள் தோன்றிவிட்டோம் என்றது ஒரு குரல்.
முதல் பார்வைக்கு அச்சத்தையும் வேதனையையும்
அனுபவமாக்கியது அது.
மனிதர்களில் ஒரு பகுதியினர் மறு பகுதியினரை
அச்சத்தாலும் வேதனையாலும் அவமானத்தாலும்
ஒருக்காலும் எழுந்திருக்கவே இயலாதபடி
அடித்து நொறுக்கி
உருவப்பட்ட அவர்களின் வலிமையையெல்லாம்
கொண்டு கட்டப்பட்டதாய்க் காட்சியளித்தது அது.
ஆகவேதான் இன்று இது இடிக்கப்பட இருக்கையிலும்
அச்சத்தையும் வேதனையையும் அவமானத்தையும்
அதைக் கட்டுவித்த மனிதர்களுக்கும் அளிக்கிறது.
(இன்னும் திமிர்பிடித்தலைபவர்களை இவ்விடம் பேசவில்லை.)
தனது காம, லோப, அதிகார சுவ வாழ்விற்காய்
அடிமனத்தில் தந்திரமாய்த் தோன்றிய இழிகுணம் ஒன்று
புற உலகின் பருப்பொருளாய்த் தோன்றி
இத்துணை அருவருப்பான ஒரு பிறவி
இனியும் இப்புவியில் தோன்ற முடியுமா எனும்படியான
ஓர் உச்சப்படைப்பாய் நிற்கிறது
ஆகவேதான் அந்த அடிமனத்தைக் குறிவைத்தே
அவர்கள் நெஞ்சை நோக்கி உதைக்க வேண்டியுள்ளது.
எந்த ஒரு கருத்தியலும்
அதை உருவாக்கியவனையே
மையமாகக் கொண்டிருக்கிறது
ஆகவே எந்த ஒரு கருத்தியலும்
உறுதியான ஆபத்துடையதே என்றிருக்க
கண்கூடான இழிசுவர் என்னைத் தகர்க்க
தத்துவமொன்றா வேண்டும் என்றது அந்தச் சுவர்
ஆகவேதான், இடையறாத உயிர் இயக்கத்தால்
அந்தரவெளியில் வேர்கொண்டிருக்கும்
நம் கால்கள்கொண்டு
அந்த இதயம் பார்த்து உதைக்க வேண்டியுள்ளது.