சலனப் படக் கருவி முன்
ஒவ்வொரு கணமும்
மாறிக் கொண்டேயிருக்கும் உலகை
ஒவ்வொரு கணமும்
மாறிக் கொண்டே
கண்டுகொண்டிருக்கும்
ஒற்றைவிழியாகி விட்டானோ அவன்?
நீர் சூழ நின்ற பாறைமீது
நில்லென்று பூத்த பறவைக்கூட்டம்
சிறகடிக்கும் கோலம் காணவோ
தன் கால்களை அகலவிரித்தூன்றிக்
காத்திருக்கிறது ஒற்றைவிழி?
ஒளிப் பெரும் புன்முறுவலாய்
பளீரிடும் பாறைகள் புல்திரடுகளுடே
மனம் கனக்கச் சுழித்துச் செல்லும் நீரில்
தம் பளு தாளாது ஊர்ந்து செல்லும் எருமைகளை
தேய்த்து நீராட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி
எத்தனை காலங்களாய் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்?
யாரோ அவள்?
நிலைமாறாது நிலவும் பரிவோ?
காண்பானின் உயிரோ? அவன்
கண்ணீரால் எழுதப்பட்ட ஓவியமோ?
இங்கே பார், ஆனந்தா,
யாவற்றினும் முக்கியமானதைச்
சொல்கிறேன்; அதனை
இதோ இந்த இயக்குநரும்
சலனப்படக் கருவியாளரும்
நன்கு அறிந்திருப்பதைக் கவனி.
இருமை களைந்து
ஒருமை பெற்ற
பார்வை மட்டுமேயான ஒரு மனிதனையன்றோ
பொருத்தமான ஒரு கருவிகொண்டு
படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
பார், ஆனந்தா, ஒரே சட்டகத்துள்
நான் காண்பதாய்
என்னொடு பார்க்கத் தொடங்கியவர்கள்
நான் இல்லாமலே இப்போது
செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்.
இதைத்தானே ஆனந்தா
காலமெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருந்தேன்!