கனவு பூமி
விழித்தெழுந்தபோது கண்ட காட்சியைக்
கனவு என்று சொல்வதெப்படி?
கனவுக்குள் விழித்தெழுந்திருக்கிறேன்
என்றா சொல்கிறீர்கள்?
அப்படியானாலும் அது நல்லதல்லவா?
கனவிலிருந்தும் இனி விழித்தெழுவதற்கான
நற்குறியல்லவா அது?
அன்று
மழை வெயிலுக்கு விரிந்த
குடைகள்போல் காணப்பட்டன,
மனிதர்களின் எல்லா இல்லங்களும்.
புரிதல்மிக்குப் பேணப்படும்
பிரம்மாண்டமான வீட்டுத் தோட்டம் போல்
காணப்பட்டது இயற்கைவெளி.
ஒருநாளுமில்லாப் பெருமகிழ்வால்
பூரிப்படைந்தது போல் பசேலென்று துளிர்த்துக்
குலுங்கிக் கொண்டிருந்தன தாவரங்கள்.
காலம் அதுவரை அனுபவித்தேயிராத
பாட்டும் நடனமும் ஓவியமுமாய்த் திகழ்ந்தன
பாறைகளும் நதிகளும் பறவைகளும் பூக்களும்.
பறவைகள் துணுக்குறும்படியான
வழமையான பூஜைமணி ஓசைகளற்று
ஒரு புத்துலகை அடைந்திருந்தன,
கோயில், பள்ளிவாசல், தேவாலயக் கட்டிடங்கள்.
கண்முன்னே ஆட்டபாட்டங்களுடன்
துள்ளிக் கொண்டிருக்கும் பேரக் குழந்தைகளைக் கண்டு
என்றுமாய் மரணத்தை விரட்டிவிட்ட பெருமலர்ச்சியுடன்
அமர்ந்திருக்கும் பேரியற்கைப்
பெருந் தொன்மையின் புதுமகிழ்ச்சி.
இயற்கைச் சிற்றுலா வரும் குழந்தைகள்
இனி கண்ணாம்மூச்சி விளையாடுதற்கு மட்டுமே என்று
தனது அர்த்தமின்மைகளை யெல்லாம் துறந்து,
பேணு மொரு தூய்மையும் வெறுமையுமாய்.
வெளி ஒளிர, காற்றும் களிப்பெய்த
தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட
பழைய கோயில்களின் புத்தம்புதிய கோலம்.
இதுவரையிலும் பூமி கண்டிராத நெகிழ்ச்சி.