காலை நேரத்துப் பேருந்து நிறுத்தங்களில்…
தன் கொதிநேர நெருப்பில்
காலைநேரம் எரிந்து கொண்டிருக்கையில்
யாரோ
யாழிசைத்துக் கொண்டிருப்பதுபோல்
எத்தனை அதிசயங்களுடன்
எத்தனை பசுமையுடன்
பூத்து நிற்கிறது
பேருந்து நிறுத்தங்கள் தோறும்
இக் கல்லூரிப் பெண்களினது இளமை.
அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும்
ஆழ்கடல்மேல்
அணுவசைவும் அறியாத
முழுநிலவின் அமைதி.
சுழன்று சுழன்று
உழன்று கொண்டிருந்த அறிவு
எப்படியோ தன் விளிம்பிற்கப்பால்
கண்டுகொண்ட மவுனம்.
தகிக்கும் பாலைவனம்
தன் கடல் வயிற்றுள்
வைத்திருந்து வைத்திருந்து
ஒருநாள்
தன் மடியில் பெற்றெடுத்துக்கொண்ட
சிறுசோலை.
பண்டு திசைமாறித் திரிந்த
நாவாய் கண்டுவிட்ட கரை.
வழிச் சத்திரமோ, வேகத்தடையோ அல்ல:
பொருளற்ற வாழ்வின் பொருளற்ற வேகத்தை
அணைத்துவிடும் நிறுத்தம்.
பெறுபேறு.
காதற் கரமொன்று
நம் முன் நீட்டும்
பூங்கொத்து.