Tuesday, September 25, 2012

அழுக்குத் தெருவும் அணியிழை மாந்தரும்

இந்தக் கரியநிறப் பறவைகள்
குப்பைக் குவியலிலிருந்து
செத்த பெருச்சாளி ஒன்றை
நடுவீதியில் இழுத்துப் போட்டு
என்ன செய்முறைப் பாடவிளக்கம்
தந்து கொண்டிருக்கின்றன?
போவோர் வருவோர்க்குப் பயந்து பயந்தே
--ஆனாலும் துணிச்சல்தான்-
நடுவீதியில் வைத்து
நகரத்துப் பெருச்சாளிகளின் இரகசியத்தை
அகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறதாகப் பேச்சு.
அங்கே
தெருக் குப்பைகள் காற்றோடு கூடி
நம் அவலக் கதைகளினைப் பேசிப் புலம்புவதை
நாசி சுளிக்க கேட்டிருக்கிறீர்களா?
குப்பைகளை வீதியில் விதைத்தால்
வீதியும் உங்களுக்குக்
குப்பைகளைத்தானே தரும் என்று
அவை நம்மைப் பார்த்து முறைப்பதைப்
பார்த்திருக்கிறீர்களா?
’அழகழகான இல்லத்தரசிகளா இப்படி!’
என்று தம் அழகுணர்ச்சி அடிவாங்கி
மண்ணைக் கவ்வி
எழுந்திருக்கவே முடியாமல் விழுந்து கிடப்பதைக்
காணுங்கள்.
எத்தனை பெரிய பொய் இது,
இந்தப் பெண்கள் தங்கள் வீட்டையும்
உடலையும் மனதையும்
தூய அழகுடன் வைத்திருக்கிறார்கள் என்பது!
வீசிவிட்டுப் புறங்காட்டிப் போய்க்கொண்டிருந்த
பெண்ணைச் சில அடிகள் தொடர்ந்து
துவண்டு நின்றுவிட்ட
குப்பைச் சுருள் ஒன்று
இனி எழுந்திருக்க முடியாத
மோக பங்கத்தில்!
விளக்குமாறும் கையுமாய்
வீட்டுமுற்றத்துக்குள்ளே, மரத்திலிருந்து
ஒரு இலை விழுவதைப் பொறுக்காத வன்மத்துடன்
வீதிக்கு முதுகு காட்டுவார்!
எத்தனை நேர்த்தி, எத்தனை கச்சிதம்,
எத்தனை வன்மம் தங்களை மட்டும்
அழகு செய்து கொள்ளுவார் தகைமை!

* ’நீ திரும்ப,
உன் முகமே தஞ்சமெனக் கிடக்கும்
உன் குழற்கற்றையும்
தாம் திரும்ப’
உயரற்ற பிணச்சடங்குகள் தாமோ பெண்ணே,
நீ முற்றம் பெருக்கி வாசல் தெளித்துக்
கோலமிட்டுப் போகும் கலைப் பண்பாடும்?
ஆயிரமாயிரமாண்டுக் காலத்திய
அசிங்கம் இது!
அதிகாரத்தைக் கொஞ்சம் எங்களுக்குக்
கொடுத்துப் பாருங்கள் காட்டுகிறோம்
என்கிறார்கள் பெண்கள் முன்னணியினர்.
அன்பு போதாதா என ஏங்குகிறது
மிச்சம்மீதி கலந்த
எச்சிலையாய் விரிந்து கிடக்கும்
தெருக்குப்பை.

குப்பைகளைத் தெருவில் விதைக்காதீர்கள் யாரும்
குப்பைக்கூடையின் புனிதத்தை வணங்கி
அதை வாசலில் நிறுத்தி
அடிப்படைநலப் பணியாளருக்காகக் காத்திருப்போம்.

* எஸ்ரா பவுண்ட்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP