வழி கேட்டுச் சென்றவள்
வெளியின் அழகில் அமிழ்ந்துபோய்
வெறுமைகொண்ட நெஞ்சினனாய்
அவன் தெருவாசலில் நின்றுகொண்டிருந்த கோலமோ
அத்துணை தெளிவும் தேவையும்
தேடலுமாய்ச் சென்று கொண்டிருந்தவளை
நிறுத்தி
இங்கே அம்ருத விலாஸ் கல்யாண மண்டபம்
எங்கே இருக்கிறது என
அவனிடம் கேட்கவைத்தது?
அவள் கேட்டதும்
அதற்காகவே காத்திருந்தவன்போலும்
இல்லைபோலும்
தோன்றுமொரு நிதானத்துடன் அவன்
வழிசுட்டியதும்
ஆங்கே அப்போது நிகழ்ந்த
நிறைவமைதியும் தான்
எத்தனை அற்புதம்!
அவளது அழகும் இளமையும்
அவனைத் தீண்டியதும்
அவனைத் தீண்டியதென்ற மெய்மை
அவளைத் தீண்டியதும்
ஆங்கே முகிழ்த்த இன்பத்தை
அவ்விடத்திற்கே கொடையளித்துவிட்டு அவள்
மேற்சென்றதும்தான்
எத்தகைய கூடுதல் அற்புதம் அன்றையப் பொழுதில்!
அச்சமும் பதற்றமும் நிராசையுமாய்ப்
புகைந்து கொண்டிருக்கும்
கலவரபூமியிலா நடக்கிறது இது என
விலகி நின்ற அவன் விழிகள்
வியந்து கொண்டிருக்கையில்
நேற்றுவைக்கப்பட்ட குண்டுவெடிப்பில்
உடல் சிதறி இறந்தாள் அவள்.
என்றாலும்
நாளை மலரப்போகும்
அமிர்த விலாசத்திற்காய்
இக் கவிதையில் உறைகிறாள் அவள்.