”பரிவுகொள்கையில் பரம் பொருளாகிறோம்”
எனது மருத்துவமனைப் படுக்கையருகே
வெகு உயரமாய் வந்து நின்றபடி
பெயர் என்ன என்று கேட்டார்கள்.
பிச்சுமணி கைவல்யம் தேவதேவன் என்றேன்.
குற்றவாளியாய்ச் சந்தேகிக்கப்பட்டவன் போலவோ
ஆராய்ச்சிக்குக் கிடைத்த அரும் பொருள் போலவோ
மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு உதவுவது போலவோ
விளக்கமளிக்க வேண்டியதாயிற்று.
கைவல்யம் என்றால்
பேதா பேதங்களைக் கடந்தவன்
யாதுமாகிய ஒற்றை மனிதன்
மனிதனாகப் பிறந்தவன்
அடைய வேண்டிய பெருநிலை…
யார் உங்களுக்கு இந்தப் பெயரை வைத்தது?
அப்பாவுக்குப் பிடித்த ஒரு பெரியார்
தனக்குப் பிடித்த ஒரு பெரியாரின் பெயரை-
அதுவும் ஒரு காரணப் பெயர்தான்-
வைக்கும் படியாயிற்று.
பிச்சுக்களில் மணி போன்றவன் எனும் பொருளுடைய
அப்பாவின் பெயர் ரொம்பப் பிடித்திருந்ததால்
முன்னொட்டாக அதையும் சேர்த்துக் கொண்டேன்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா?
பிச்சுமணி கைவல்யம் என்ற பெயர்
போதவில்லையாக்கும்?
ஆமாம். ஒரு போரார்வம்தான்
எந்த வினாடியானாலும் எந்த இடமானாலும்
ஒரு காசு செலவில்லாமல்
மிகச் சுலபமாக (பார்க்க: தலைப்பு)
பிரம்மாண்டமான ஒரு காரியத்தைச் செய்யமுடிவதை
விட்டுவைப் பானேன் என நினைத்தேன்.