களிப்பாடலும் கூக்குரலும்
சொற்களையும் சின்னங்களையும்
துறந்தவனைத்தான் நான் மணப்பேன் என்று
காதலும் நாணமும்
காற்றூஞ்சலில் அசைந்து மிளிரச்
சிவந்து நின்றது அவன் எதிரே ஒரு மலர்.
மேலும் மிழற்றியது:
உணவு என்ற சொல்
உணவாகிடுமா?
ஆகிடுமா கடவுள் என்ற சொல்
கடவுள்?
வழிபாடுகளும் பிரார்த்தனைகளும்
தொழுகைகளும் சடங்குகளும்
மானுடச் செயல்களாகிடுமா?
மானுடத் துயர் போக்கிடுமா?
இதோ இதோ எனத்
துடித்துக் கொண்டிருக்கும்
என்னிடம் நீ
இணைய இயலாத போதெல்லாம்
இதுவல்ல இதுவல்ல என்றல்லால்
என் காதலை நான்
எப்படிச் சுட்டுவதாம்?
இன்பமுமில்லாத
துன்பமுமில்லாத-
எதுவுமே இல்லாத
இந்த வெட்ட வெளியிலே
தன்னந் தனியாய் நின்றுகொண்டு
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றா
கேட்கிறாய் என்னை நீ?
கருணையும் காதலும்
அழகும் அற்புதமுமேயான
ஒரு பேருயிரை நோக்கி
நெஞ்சுருகி
பிரார்த்தனை பரவும்
வேளை இது என் அன்பனே!
நான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்.
எந்தக் கற்கோவில்களும் சிலைகளுமல்ல
என் முன் நிற்பது;
எந்த்த் துயர்நீக்கத்தையும்
தள்ளிப் போட்டுவிடும் புகலிடமும் அல்ல;
ஆசைகளனைத்தையும் ஒழித்து நிற்கும்
பெருஞ்செல்வம்.
அதிகாரம் என்றொன்றில்லாத பேராட்சி.
எதன் பேராலும் எதைக் காப்பாற்றுவதற்கென்றும்
போர்கொள்ளும் பயங்கரங்கள் தீவினைகள்
பிறக்கவொண்ணாத பேரமைதி
அருள்வெளி.
துயர்போலும் நெஞ்சைத் தீண்டும்
எனது களிப்பாடல் உனக்குக்
கேட்கவில்லையா?
அவன் பேசலானான்:
நான் மலரல்லவா?
நான் மனிதன்?
இதுவே எனது துக்கமோ?
என்றாலும் உன் குரல் கேட்கும்
செவியுற்றேன்.
உன் காதற்பேறு பெற்றேன்.
இதுவே என் பெறுபேறு என்றாலும்
நான் ஒரு மானுடனே; நின் போலுமொரு
மலரல்லன்.
பாதையில்லாப்
பாதையறியும் திறனில்லான்.
கத்தியின் கூர் அறியாது
கத்தியை உபயோகிக்கின்ற குரூரன்.
போகத் துய்த்தல்களில்
சுரணையழிந்து கொண்டிருக்கும் வீணன்,
வற்றாத கண்ணீரும்
விளங்காத வாய் வார்த்தைகளும்
வெற்றி பெறாத இதயமும்
ஆறாத ரணங்களுமுடைய மானுடன்.
நின்னைக் கரம் பிடிக்க இயலாத
பத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிந்த
கையில் கொலைக் கருவிகளுடன்
கடவுளை நாடி நிற்கும் மூடன்.
நான் இந்தியன், நான் அமெரிக்கன்
நான் இந்து நான் முஸ்லிம்
நான் கிறித்தவன் நான் பிராமணன்
நான் யூதன், நான் சைவன்
இரத்தக் குழாய்கள் முழுக்க
அடைத்துக் கொண்டிருக்கும் கொழுப்புடையோன்
ஆனால் இன்று இதோ இக்கணம்
நீ வாடி உதிர்ந்து விடுமுன்
என் வாழ்வையும்
நான் முடித்துக் கொள்ள விழைகிறேன்.
உன் வாட்டம் தொடங்கியதுமே
என் நெஞ்சும்
குருதி கொட்டத் தொடங்கிவிட்டது என் அன்பே,
என்றும் மலர்ந்து நிற்கும் கருணைப் பெருவெளியில்
மீண்டும் மீண்டும் பூத்துக் கொண்டேயிருக்கும்
உன்னோடு இணைந்து கொள்ள
இதோ வந்துவிட்டேன் என் ஆருயிரே!