பச்சை அலைவீசும்
பச்சை அலை வீசும்
நெல் வயற் கடல் நடுவே
ஓடும் ஒரு தார்ச்சாலைப் படகு.
அதன் உள்நிரம்பியுள்ள பொருளோ
காரணமில்லாப் பேருவகை
அல்லது பெருந்துக்கம்.
சூழத் துயர் கனத்துத்
தாழ்ந்து நிற்கும்
அனைத்து நெற்கதிர்களையும்
ஆற்றவென-
எழுந்த ஒரு நெற்கதிரின்
காதற் பெருங்கனலோ
கருணையோ, தீரமோ
இந்தக் கதிர் அரிவாள்?
மவுனமான சாலைகள்
நம்மை அழைத்துச் செல்கின்றன,
இயற்கை வெளியூடே
விண்வியந்து சுரக்கும்
மலைகளைநோக்கி.
மலைகளின் மடிகளெங்கும்
அருவிகளின் கும்மாளம்.
நீரடியில் அமிழ்ந்து கிடக்கும்
கூழாங்கற்களின் நிச்சலனம்.
காடுகளின் இலைகளெங்கும்
பேரின்பத் தாளம்.
மண்பற்றிநிற்கும் வேர்களெங்கும்
ஒரு நாளுமழியாத தாகம்.
கண் நிறைந்த காதல்
ஒருக்காலும் மாறாதோ
எத்துணை நேரம் பார்த்துக் கொண்டிருப்பது,
நீர்க்கரை மரங்களாய்-
நீர்மீது ஆடும் ஒளியையும் காற்றையும்!
எத்தனை அழகான ஜோடி,
நீரோட்டமும் பரிசில் வட்டமும்!
நதியோரம்
மலம் கழிக்க அமர்ந்த கோலம் போலக்
கோயில்கள்.
சாப்பாட்டுத் தட்டைத்
தன்னிடம் கழுவும் மனிதனை நோக்கிக்
கெஞ்சினாள் அவள்:
“தாங்கொணாமை நேரிட்டு விட்டது மகனே,
நீ உனது சாப்பாட்டுத் தட்டைப் பேணுவதுபோல்
என்னைப் பேணுவதுமட்டுமே வழி!”
வானக் குடை முழுசாய் விரிந்த
இத்தனை பெரிய வெளியில்
எவ்வுயிரும் அமைதியுடன்
அங்கங்கே அமைந்திருக்க
இங்கிருந்து அங்கு
எத்தனை வேகம்
இந்தத் தார்ச்சாலைக்கு மட்டும்!