அவன் தனியானவனல்ல
அன்பும் அழகும் இன்பமும்
அரிதாகிப் போனதென்ன?
நம் விசாரணையின்
பயணம் ஒருபுறமிருக்கட்டும்
விழி நிலை ஒன்றேயான
அவன் முன்னே காத்திருப்பதென்னவோ
வன்மையான இவ்வுலகின்
துயர் வகைமைகள் தாமே.
துயர் தப்பிய நுண்ணுணர்வாளருண்டா?
துயரங்கள் வாய்திறந்து
பேசக் கனல்வதையே அவன் பேசுகிறான்.
ஏழ்மையை ஏவி
அவனைப் பரிதவிக்க விட்டாலும்
அவன் தனிமைப்படுவதில்லை
ஏழ்மையில் உழன்று
பரிதவிக்கும் மக்களின் நாவாய்
அவன் அமைகிறான்.
சிறையில் அடைக்கப்பட்டுச்
சித்ரவதை செய்யப்பட்டாலும்
அவன் தனிமைப்படுவதில்லை
சிறையில் அடைக்கப்பட்டுச்
சித்ரவதை செய்யப்படுவோர் குரலாய்
அவன் ஒலிக்கிறான்.
வஞ்சனை அநீதிகளால்
அவன் வாட்டமடைய நேர்ந்தாலும்
அவன் தனிமைப்படுவதில்லை
அத்தகைய மனிதர்களின் பிரதிநிதியாய்
அவன் ஒலிக்கிறான்.
அவன் தனியானவனல்ல என்பதே
அவன் தனிமைப் படாததின் ரகசியம்.
அவனே இவ்வுலகம் என்பதே
அவன் பேசுவதெல்லாமே
யாரையாவது நோக்கிய முறையீடாகவோ
இறைஞ்சலாகவோ கோபமாகவோ அன்றி
தனக்குத் தானே முனங்கிக் கொள்கிறதாக
சுய விசாரணையாக
இருப்பதின் ரகசியம்.
அன்பும் அழகும் இன்பமும்
அரிதினும் அரிதாகவாவது
காணப்பெறும் இரகசியமும்.
அதிகாரமும் வன்முறையும்
எவ் வடிவிலும்
இதய மொக்கைக் கருக்கி விடுவது கண்டு
அன்பினதும் கருணையினதும் அருமைக்காய்
இப்போது அவன் துடிப்பதன் இரகசியமும்.