அந்த ஊர்
மழைநீரில் தன்னந்தனியாய்
மிதக்கும் ஒரு காகிதப் படகுபோன்ற அழகு.
வெறுமை சூழ்ந்து நிற்கும் மணல்தேரிகளும்
வைகறைகளிலும் அந்திகளிலும்
வானத்திற்கூடும் அதிசயங்களும்
நண்பகல்களில்
மனித வசிப்பிடங்களுக்குள்ளே வந்துறைந்து
முணுமுணுக்கும் ரகசியங்களும்
ஆடிக் காற்றும் அடைமழையும்
கரைபுரளும் ஆற்றுவெள்ளமுமாய்
வேதனை கிளர்த்தும்
பருவகாலங்களை உடையதாயிருந்தது
அந்த ஊர்.
அனைத்து வீடுகளிலுமுள்ள அனைத்து மனிதர்களும்
உறவினர்களாயிருந்தார்கள் அந்த ஊரில்.
அயலூர்களிலிருந்து ஊருக்குள் வரும்
எளிய சைக்கிள் சுமை வியாபாரிகள்
இன்னபிற அந்நியர்களைக் காணுங்கால்
பித்துப் பிடித்தவர்கள்போல் பாய்ந்து சென்று
அவர்களைச் சூழ்ந்து சொரியும் விநோதமான
அன்புப் பெருக்குடையோராய் இருந்தார்கள் அவர்கள்.
அதிசயமானதோர் காதலால் ஒளிர்ந்தன
குழந்தைகளுடையதும்
கன்னிப் பெண்களுடையதுமான கண்கள்.
அஞ்சித் திரும்பி கோட்டைச் சுவர்களாகிவிடாது
நீர்நிலையெங்கும் முழுமையாய் விரியும்
வட்டங்களும்
தாமரைகளும்
பூக்கும் குளம் மிளிரும் அந்த ஊரில்.