கட்டான உடலுடைய…
கட்டான உடலுடைய பெண்களைக்
காணும்போதெல்லாம்
தேவதைகளும்
குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம்
குழந்தைகளும்
நினைவுக்கு வருகிறார்களே என்ன?
Poet Devadevan
கட்டான உடலுடைய பெண்களைக்
காணும்போதெல்லாம்
தேவதைகளும்
குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம்
குழந்தைகளும்
நினைவுக்கு வருகிறார்களே என்ன?
இந்த பூமியை
நாம் ஒரு கோயில் என உணர்வதற்கு
ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும்
விக்கிரகங்களாக உணர்வதற்கு
தானாக நிகழும் ஒவ்வொரு செயல்களும்தான்
கடவுள் என உணர்வதற்கு
நாம் செய்ய வேண்டியதென்ன?
யாராவது சொல்லிக்கொடுத்து நிகழ்வது செயலாகுமா?
தானாக நிகழ்வதல்லவா செயல் என்பது?
எப்படியோ ஒரு விதை தோன்றி
வந்து விழுந்துவிட்டதுதானே
இப் பேரண்டத்திற்குள் கோள்களாகவும்
பூமியெனும் ஒரு கோளில்
கோடானு கோடி
உயிர்களாயும் தாவரங்களாயும்
மலர்ந்து விட்டன?
மதத்தைத் தேடும் மனிதனுக்கு அவர்கள்
கோடானு கோடி விக்கிரகங்களாய் கடவுள்களாய்க்
குறிப்புணர்த்தாததாலோ (அ) கண்டுகொள்ளப்படாததாலோ
மனிதன் கடவுளையும் விக்கிரகங்களையும்
படைத்துக் கொண்டு
சக உயிர்களையும் தாவரங்களையும்
மறந்து திரிகிறான்?
கோடை ஆரம்பித்து விட்டது
காற்றும் மிக மிக மெல்லியதாகி
வேகங்கொண்டு
வனமெங்கும் வெளியெங்கும்
களைத்து மூச்சு வாங்கிய போதுதான்
ஆங்காங்கே அவ்வப்போது
அமைதியாக உட்கார்ந்திருக்கிறது
யார் இருக்கிறார்கள் இங்கே?
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டங்களும்
அமைதியான இசையும் மட்டும்தானே இருக்கிறது இந்த உலகில் ?
இந்த நெல்லி மரத்தில் கனிகள்
கூட்டாகவா தனித்தனியாகவா
தொங்கிக் கொண்டிருக்கின்றன?
கூட்டாகவும் தனித்தனியாகவும்
என்கின்றன அவை ஒருமித்த குரலில்.
அவர்கள் சொல்வது பிரிவு எனும்
துயர்ப் பொருள் கொண்ட தனிமை அல்ல.
முழுமையாய் அமைந்து
முழுமையைப் பரப்பத் துணிந்த தனிமை!
அவைகளை உதிர்த்து
ஒரு மூட்டையில் கட்டினார் தோட்டக்காரர்
அப்போதும் கூட்டாகவும் தனித்தனியாகவும்தான்
இருக்கிறோம் என்றனர்!
மூட்டையை அவிழ்த்து
தரையில் கவிழ்க்கவும்
சிதறி ஓடப் பார்த்தன சில கனிகள்
மேலே மேலே விழுந்து மோதி
கூடிக் கொள்ளவே பார்த்தன சில கனிகள்.
மொத்தத்தில் அப்போதும்
கூட்டாகவும் தனித்தனியாகவுமே இருந்தனர்
பிரிவு எனும் அவலத்தனிமை கொண்டவர்களாயல்ல.
(மரணமற்ற பெருவாழ்வைக் கொண்ட)
கனிகள் அல்லவா?
மனிதன் துவைத்து உடுக்கவேண்டிய
ஆடைகளை
சூடான இரும்புப் பெட்டி கொண்டு
அழுந்தத் தேய்த்து முடித்து
ஒழுங்கு கூட்டி
அவன் அடுக்கி அடுக்கி வைப்பதற்கு
எவ்வளவு கனல் வேண்டும் என்பது
அவன் அறியாததா?
பொட்டுத் தீ கனலும் பீடி கொண்டே
தன் உடலைப் பேணிக் கொள்கிறான் அவன்.
பயில்வானுடையது போலிருக்கும்
ஒரு புஜம் தவிர்த்து அத்தனை உறுப்புகளும்
ஒரு குச்சிப் பூச்சியினுடையது போலிருக்கின்றன
இவன் ஆற்றல்களையெல்லாம் உறிஞ்சிவிட்டது
இந்த உழைப்பு மட்டும்தானா?
இவனது பிற நாட்டங்களையெல்லாம்
கவனித்திருக்கிறீர்களா?
இரண்டு நண்பர்கள்
பிரிய மனமின்றியே
சண்டை போட்டுக் கொண்டு
எவ்வளவு காலமாய்
இப்படியே
பிடிவிடாமலும் நிற்பார்கள்?
பின்புறத் தோளில் நீளமாய்
காற்றோடு கொஞ்சி உரையாடியபடியே வரும்
முந்தானையை அல்லது துப்பட்டாவை
முகத்திற்கு வெகு அண்மையிலிருந்தும்
கண்டுகொள்ளாமல்
தன்பாட்டில் ஆடிக்கொண்டிருக்கும்
மயிர்க்கற்றைகளை
ஒரு எண்ணம் தோன்றும்போதெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்.
அதே போலத்தான் அவர் இவனோடு
பேச நேர்கையிலெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்
இன்னும் எத்தனை எத்தனை அழகினர் அவரிடம்
எத்துணை அழகும் அமைதியும்
சுடர்மதிக் கவனமும் கொண்ட பேரழகினர்
ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாதவர்களாய்!
அவனிடம் என்ன இருக்கிறது?
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது
அந்தச் சொற்றொடரும் கழன்று விழுந்தபோது
திகம்பரர்கள் என்று
ஆகப் பெரிய ஆடம்பரமான
அம்மணத்தை அணிந்தவர்களாய்
நடந்தவர்களை எண்ணியபோது
அந்த எண்ணமும் சொற்களுமே
கழன்று விழுந்தபோது
அவனிடம் என்ன இருந்தது
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது?
நடைபாதையில் கோயில்வாசல்களில்
பிச்சைக்காரியாய் அமர்ந்துவிட்ட
அந்தப் பெண்ணுக்கு
அன்னை இல்லையா? காதலன் இல்லையா?
எப்போதாவது வந்து சிரிக்கவைக்கும்
கடவுள் போதுமா?
காமவெறியர்களையா தேடிக்கொண்டிருக்கிறாள்?
பிரச்னை உலகைக் கண்டுகொள்ளாமல்
புலனின்பங்களில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்!
எதையாவது யோசித்துக்கொண்டேயிருக்காமல்
நிகழ்காலத்துக்கு வா நிகழ்காலத்துக்கு வா என்று
அழைத்துச் செல்லப்பட்டுதான்
திவ்யா மேடம் திருமணவிழாவிற்கு அவன் வந்து நின்றான்.
நீங்கள் யாராயிருந்தாலும் சரி
எப்போதாவது - ஒரு கணம் –
நீங்கள் இதனைப் பார்க்கத்தானே செய்திருப்பீர்கள்
பற்றி சுடர் இயற்றத் தெரியாதவர்களாயினும்?
பழைய கவிதை புதிய கவிதை எனக் குழம்பாமல்
நித்ய சவுந்தர்யம் கொண்ட வாழ்வை
நித்யஸ்ரீயை
இயற்றுவதையே இலட்சியமாகக் கொண்டவர்கள்தாமே?
அன்னை தன் மகளையோ
ஆண்மகன் தன் காதலியையோ
அவள் தன்னைத் தானோ
இல்லை அழகின்மீதே அழகுதானோ
இப்படித்
தானற்ற வெளிதனிலே
தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது
பார்வையை அடிக்கோடிடுவதுபோல்
கண்களுக்கு மையிட்டுக்கொள்கிறார்கள்
புன்னகையை அடிக்கோடிடுவதுபோல்
இதழ்களுக்கு வண்ணம்…
தாவரங்களை நெருங்குபவர்களாய்
கூந்தலில் மலர்கள்…
தனித்ததொரு நட்சத்ரத்தைக் காட்டுவதும்
யாவும் ஒற்றை ஒற்றைத்
துளிகளால் மட்டுமே
என்பதைக் காட்டுவதுமாய் அமைந்த
மூக்குத்தி…
உதயசூரியனை நெற்றிப்பொட்டாகவும்
வண்ண மலர்களையெல்லாம்
ஒளிரும் நட்சத்திரங்கள் மின்னும் ஆடைகளாகவும்
சூட்டிக் கொள்கிறவர்கள் யார்?
அந்த நெற்றிச் சுட்டியும்
பார்வையும் ஒன்றே போதுமென்றாலும்
பூரண நிறைவடைந்துவிட்ட ஓருடலை
கைவளைகள் கால்கொலுசுகள் காதணிகள் என்று
எண்ணற்ற அணிகளால்
ஆராதிக்கும் வண்ணமாயும்
ஒரு செயல்முறைப் பாடமாயும்
சுட்டும் ஓர் அழகினைத்தானே
அலங்காரம் என்கிறோம்
மகாலட்சுமி என்கிறோம்
இன்று
மானுட இலட்சியம் என்கிறோம்
உள்ளதை அறிபவர்கள்தாமே நாம்?
தொட்டு தடவிச் செல்கிறது காற்று
பற்றற்றான் பற்றினைப்
பற்றிக் கொண்ட பேருயிராய்!
காற்றின் தழுவலில்
நாம் காணும் இன்பமும்
காதலின் இன்பமும்
ஒன்றா?
அதேதான் அதேதான்
எனச் சிரித்தன
காற்றிலும் ஒளியிலும்
குதித்தாடும் மரக்கிளைகள்!
எத்தகைய செல்வத்தால்
இத்துணை இன்பக் கொண்டாட்டங்கள்!
என்பதையறியாத சுகஜீவிகளைப்
பார்த்திருக்கிறீர்களா?
காலமற்ற பொழுதுகளின்
கருணைக் கொடையினால் பூக்கும்
ஏழைகளின் களிப்பினைச் சுட்டி சுட்டி
“நன்றாகத்தானே இருக்கிறார்கள்” என
தப்பித்துவாழும் மனிதர்களைப்
பார்த்திருக்கிறீர்களா?
வறுமையையே
ஊனமாகக் கொண்ட
ஏழ்மையுடன்
கோயில் வாசல்கள்முன்
பிச்சையெடுக்கும் மானுடத்தைப்
பார்த்திருக்கிறீர்களா?
நாம் அறிந்திருக்கிறோமா,
ஆசைகள் அலங்கார அகங்காரச்
சுமைகளில்லாமல்
காற்றையும் வெளியையும் ஒளியையும் மட்டுமே
அளாவும் எளிய உயிருக்குத்தான்
பறவை என்று பெயர் என்பதை?
அத்துணை பிரமாண்டமான
துளி அமிழ்தினை விலக்கி
அத்துணை பிரமாண்டமான
துளி விஷத்தை அருந்துவனோ
மனிதன்?
கண்டுகொண்டபின்னே
காதல் தவிர பிறிதொன்றுண்டோ?
கரடுமுரடான
கவசத்தால் தன் உயிர்க்குருத்தைக்
காத்துக்கொண்டிருக்கும் மரம்
தன்னை வெளிப்படுத்துமிடம்
தனது தளிர் இலைத் துளிரில் அல்லவா?
தன் உயிர்க் குருத்தைப் போலே
அதே சூழலின்மீதும்
கசப்பின்றி வெறுப்பின்றி
கொண்டிருக்கும்
அன்பின் உறவினாலல்லவா?
உன்மீது
ஒரு தூசு உட்காரச் சம்மதிக்குமோ
காதல் உள்ளம்?
தூய்மையாவதற்கா நீராடுகிறோம்?
குளுமையாகவும் அல்லவா?
குளித்து முடித்து நேர்த்தியான ஆடையுடனே
எங்கிருந்து வருகிறதென்றறியாத
ஒரு பெருநிறைப் பெருங்களியுடனே
ஒரு உலா…
உள்ளதையும் விஞ்சியதோர் சுகம்
உலவுகிறதோ இவ்வுலகில்?
அழுக்கு உடலும் நேர்த்தி கலைந்த ஆடைகளும்
ஒருவன் பைத்தியம் என்பதைக் காட்டுவது போல
அடக்கமான ஆடைகள் ஒருவனை
ஆரோக்கியமானவன் என்பதைக் காட்டுவது போல
குறிப்பாக பெண்களின் வண்ணவகை ஆடை அணிகள்
அவர்களின் உளச்சுவையைக் காட்டுகின்றன!
குறிப்பாக எந்த ஒரு ஆணிடமாவது
எளிமை என்ற சொல்லை நாம்
எங்காவது பார்த்திருக்கிறோமா?
அவர்களது ஆடைகளும் பாவனைகளும்
எத்துணை பொய்மையாக இருக்கின்றன!
அறிவு, புகழ், அதிகாரம் என
அவர்கள் தங்கள் உள்ளத்தைப் போர்த்தியிருக்கும்
ஆடம்பரமான ஆடைகளின் ஆபத்தான அழுக்குகள்!
கண்ணுளார் காணமுடியாத ஒன்றுண்டா என்ன?
அவன் தன் பென்சில் எழுத்துக்களை
அழித்து அழித்து எழுதுவதற்காக
ஒரு அழிப்பான் வைத்திருந்தான்.
ஒவ்வொரு அழிப்பிலும்
தன்னையும் அழித்துக் கொண்டு
தன் பிறவியை
நன்கு அறிந்ததாயிருந்தது அது.
அப்படி ஒரு பேரமைதியுடன்!
தனை உணர்ந்த பெருஞானப்
பேரழகுடன்!
மிக மெதுவான
அவன் காலடி ஓசையையும்
மிக அண்மையான
மவுன வெளிகள் எதிரொலிக்கின்றன!
இல்லை, இல்லை
ஏற்று பரப்புகின்றன
மவுன வெளிகள் ஏற்றுப் பரப்புவதையோ
அண்ட வெளியெங்குமுள்ள
வெளிகள் ஏற்று பரவசிக்கின்றன!
காலடி ஓசை என்பது
பூமியுடன் பூமி மைந்தன்
ஆடிய உரையாடலின்
அன்பும் உச்சரிப்பும் அல்லவா?
எத்தனைத்துளி அமிழ்துகளாலும்
முடிவதில்லை
வேர்பிடித்து பரவிவிடும்
துளிவிஷத்தையும் முறித்துவிட!
கவனமும் அக்கறையுமில்லாத
நம் நீர்வெளி உலகில்
தோன்றித் தோன்றி
முழுமை நோக்கியே
விரிந்து கொண்டிருக்கின்றன
நம்முள்ளிருந்து குதித்து
வேர்பிடித்துப் பரவும்
துளி விஷமும் துளி அமுதும்!
திகைத்துப்போய் நிற்கிறோம்
மனிதர்களில்லா நீர்வெளியில்தான்
மனிதர்களாகிய நாம்
பேருலகைப் பார்த்தபடி செயலற்று
நம் குழந்தைப் பொழுதுகள் மட்டுமே
தேவதை மீன்களாய் நீந்திக் களிப்பதை!
கண்டங்கள், கடல்கள், நாடுகள் என
கட்டு இழைகள் பிரிக்கப்பட்டிராத
பரிசுப் பொட்டலம் போலிருக்கிறது பூமி!
இந்த நூலகங்கள் தோன்றியபிறகும்
மனிதர்கள் வெகுவாகக் கூடிவிட்டபிறகும்
பழம் பெருந் தடங்கள் எல்லாம்
பார் சுற்றுலாத் தலங்களாகிவிட்டபிறகும்
மதங்களும் கோயில்களும்
கொள்கைகளும் கோட்பாடுகளும்தான் எதற்கு?
நீ ஆணாயிருந்தால் என்ன
பெண்ணாயிருந்தால் என்ன
தனை அறியும் பார்வையும்
தனைத் துறக்கும் பாதையும் அல்லவா
ஒரே வழியாய் இருக்கிறது?
அந்த நகரில் எவரும் அறியாதபடிக்கு
மர்மமான ஒரு தீவிரவாதக் குழுமம்
தோன்றி அலைந்து கொண்டிருந்தது
எந்த ஒரு திட்டமும் சிந்தனையுமில்லாமலே
(மாறாத இந்த உலகை மாற்றிவிடத்தான்)
எந்த ஒரு மனிதர்களும்
தாங்கள் அப்படி ஒரு குழுமத்தில்
உறுப்பினர்களாயிருக்கிறோம்
என்பதையே உணராதபடி
அந்தக் குழுமம் பெருகிக்கொண்டேயிருந்தது
மெதுவிஷத்தாலும் தீண்டப்பட்டிராத
அந்த மனிதர்கள் எல்லோரும் கூடி
எந்த இடத்திற்கும் சென்று சேராத
ஒரு தானியங்கும் சாலையையும்
எவர் கண்களுக்கும் புலப்படாத
ஒரு பூந்தோட்டத்தையும்
எந்த ஒரு மனிதனையும் காயப்படுத்திவிடாத
(எளிமையும் இரக்கமுடைய)
கவிதை எனும் மொழியையும் ஒலியையும்
படைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஆடையும்தான்
எத்துணை அழகு, பார்த்தீர்களா? என்று
இரண்டு கைகளாலும்
தன் ஆடையை
அகலப் பிடித்து
அபிநயத்து நின்றாள் சுநேகா.
‘இந்தப் பெண்ணும்தான்
எத்துணை அழகு!” என்று
விழிகசிந்து கொண்டு நின்றது
சுற்றி நின்ற மொத்த உலகமும்!
தூத்துக்குடி பொருநை இலக்கியத் திருவிழா - 2025
கவிஞர் தேவதேவன் “பார்வை நடத்தும் பாதை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இங்கு இணைக்கப் பட்டுள்ளது.
”பார்வை நடத்தும் பாதை” காணொளி
எத்துணை கடினமாக
இருக்கிறது தெரியுமா
உன் எழில் சிரிப்பின் ஈர்ப்பினால்
இதழ் முத்தம் விழைவதனின்றும்
அவன் தன்னை மீட்டுக் கொள்வதற்கு?
நீ மலர்களாகவே இருந்திருக்கலாம்.
பெண்ணாக வந்ததுதான்
பெரும் பிழை என்றான் அவன்.
இல்லை நண்பா
நீ ஆணாக இருப்பது தான்
பெரும் பிழை என்றது அவளது பெண்மை.
மலரின் இதழோ
கனிந்துதிர்ந்த இலையோ
பறவையின் இறகோ
தென்னஞ் சிறகோ
அவனையே போலொரு
தனி உயிரோ
முழுமையிலிருந்து பிரிந்து
முழுமையை எழுத வந்து கிடக்கும்
தூரிகையோ கவிதையோ
அவன் இதயமோ
சும்மா பார்த்துவிட்டுக்
கடந்து செல்ல முடியாதபடி
குனிந்து அள்ளி எடுத்து
அணைத்துக் கொள்ளத் துடிக்கிற
காதல் ரகசிய வெளிப்பாடு
மர வீட்டின்
வெளியே ஒரு அணில்
யாருடையவோ இதயம் போல
அடங்காச் சுறுசுறுப்புடன்!
நீண்ட தாழ்வாரத்தின்
நீண்டோடிய பால்கனிக் கைப்பிடியின்
பளபளப்புக் காப்புக்கென சுற்றியிருந்த
பாலித்தீன் சுருள் அறுந்து நீண்டு
காற்றில் நாட்டியமாடிக் கொண்டிருந்தது
அவனை அழைப்பது போலிமிருந்தது
பெரும் களி நடமும் விளிக்குரலும்
சமயங்களில் தீர்ந்து பொய்யாகி
விடுதலை நோக்கி, அவனை நோக்கி
விடுதலைக்காய் அவனை நோக்கி
துடி துடித்துக் கொண்டிருந்தது போலுமிருந்தது
அவன் நெருங்கிச் சென்று
கிள்ளி அகற்றி விடுத்துக்
காற்றில் விட்டான்
அப்போதும் அது தன் களி நடத்துடன்
சுழன்று கொண்டிருந்தது
வெற்று வெளியில் நீந்தித் திரியும்
பெரு வாழ்வினின்றும் மெல்ல மெல்ல
தான் கீழ் நோக்கிச் செல்லுவதறிந்து
வேண்டாம் வேண்டாம் எனத் துடி துடித்தது
எனினும் மண்ணோடு பிறந்த நீ
மண்ணைத் தொட்டு மண்ணுள்
இறங்குவதே சரி அன்பா என்றது
ஒரு குரல் அப்போது
ஒரு காற்று மண்டபத்தில்
கூட்டமாய்ப் பேசி முடித்து
கூட்டமாய் அடங்கின சருகுகள்
விரிவிழிகள் மேலும் விம்ம
இமைக்காது நிற்கிறது வானம்
காற்று வருடிச் செல்லும்
நீர்ப்பரப்பின் அலைகளில்
பெருநிறையுடன் மிதக்கும் சருகுகளைப் பார்த்து!
வளர்ந்த பிள்ளைகள் இரண்டுடன்
விவாகரத்து செய்து கொண்டாயிற்று
அத்துணை பொறுப்புடனும்
துயர் தெரியாமல் வாழவும்
கற்றுக் கொடுக்கவும் வேண்டும் அவர்
தன் குழந்தைகளுக்கு.
”ஏன்? எங்களுக்கும்தான்!” என்பீர்கள்
அவரை நீங்கள் அறிந்திருந்தால்!
நேர்த்தியான ஆடைகளுடன்
ஒப்பனைகளுடன்
அழகுத் தெய்வம் குழந்தைகளுக்கு
அவர்களின் அம்மா!
”ஏன்? எங்களுக்கும்தான்!” என்பீர்கள்
அவரை நீங்கள் சந்திந்திருந்தால்!
நீங்கள் அவரை சந்தித்திருக்க வேண்டும்
உரையாடியிருக்க வேண்டும்
இதோ இப்போது அவர் தங்கள் வளாகத்தின்
உல்லாசவெளியில் ஒரு பெண்மணியோடுதான்
பேசிக்கொண்டிருக்கிறார்.
பேச்சு முதிர்ந்து விடைபெறும் முன்னால்
அந்தப் பெண்மணியானவர்
இவரது அன்பை ஆராதிக்கும் வண்ணமோ
இவரது ஒளிர்முகத்தில் மயங்கியவர் போலோ
அந்தப் பொலிவுக்கும் பொலிவு சேர்க்கும்
வண்ணமாய் அவர் அணிந்திருந்த
ஒரு மிகப் புதுமையான காதணியினை
மிக நெருங்கி தன் விரல்களால் ஏந்தி
ரொம்ப அழகாயிருக்கு என மகிழ்ந்து நிற்கிறார்.
“ஆ! எங்கள் அன்பையும், எங்கள் அன்பையும்,
அவருக்குச் சொல்லுங்கள் அய்யா”
என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?
பூமியின் நிழல் மடிதான்
எத்துணை கனிவு கொண்டுள்ளதாயிருக்கிறது
காற்றின் படிக்கட்டுகளில்
குதித்தாடி நடமிட்டு பாடியபடி
உதிர்ந்து வந்து கொண்டிருக்கிறது
ஒரு சருகு
பனித்துளி சூடிய
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமி முழுமையும் தழுவிக்கொள்ளும்
பச்சைக் கம்பளத்தையும்,
ஒரு மழைத்துளிக்குள்ளிருந்து
பெருகும் வெள்ளத்தையும்,
உனக்கு முன்னேயே பார்த்துவிட்டவர்கள்
எங்கள் பெண்கள் என்றது
ஒரு புள்ளிமூக்குத்தி!
தற்செயலாய் அவர் அவனைத்
திரும்பிப் பார்த்தபோது
மின்விளக்கொளியில்
அவர் முக அழகையும் விஞ்சி
ஒளிர்ந்த குட்டி மூக்குத்தியின்மேல்
ஒரு மீ குட்டி நிலவு
மேடை நடுவே
நின்றுவிட்ட ஒரு நொடி போன்ற
வியப்புடன் நின்றபடி
பாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.
பாடல் தன் பணியூடே
எங்கிருந்து எங்கிருந்து எனத்
தேடி அலைகிறது
தன்னிடம் தோன்றிய காதலினதும்
அதன் தெய்வீகத் தேன் சுவையினதும்
பிறப்பிடத்தைக் காணமுடியாது!
காண வேண்டியதைக் கண்டு
தன்னிரு கைகளாலும் அதனைப்
பத்திரமாய்ப் பற்றிக்கொண்டவர் போன்று
அவர் அந்த ஒலி பெருக்கியுடன்
மூடிய விழிகளுக்குள்
வெகு ஆழம் சென்றுகொண்டேயிருக்கிறார்
சென்று திரும்பியவர்
தனது பேச்சையும் பாடலையும்
கேட்கத் தகுதி பெற்ற ஒருவனை
ஒலிபெருக்கியுடன்
விடாது பற்றிக்கொண்டிருப்பவர்போலும்
திகழ்கிறார்
அந்த யாரோ ஒருவனுடன்தானோ
அவர் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததுதானோ
இந்தப் பாடல் என அது முடிந்தபோது
வந்து அசையாது நின்றிருந்தது
ஒரு மோனப் பெருவெளி
சிறிய
கைத்தட்டற் சிறகொலிகளால்
கலைந்துவிடாத
பேரமைதி
பெற்றுக்கொண்ட ஒவ்வொரு உயிரின்
இதயத்திற்குள்ளும் போய் அமர்ந்துவிட்டதோர்
வேதனை அம்ருதம்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP